அடிச்சு கொன்னுட்டாங்க… விபத்து வழக்கு கொலையாகிறது..!8
கோவை கணபதி கணேஷ் லே அவுட் பகுதியை சேர்ந்தவர் ஜீவா (25), சரக்கு ஆட்டோ டிரைவர் கடந்த 2024ம் ஆண்டு ஜூன் மாதம் 17ம் தேதி ஜீவா பைக்கில் சென்ற போது தவறி விழுந்து காயமடைந்து விட்டதாக கூறி கோவை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அப்போது அவர் பைக்கில் சென்ற போது தவறி கீழே விழுந்து விட்டதாக கூறியுள்ளார். இதன் அடிப்படையில் கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர் இந்த நிலையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்த ஜீவா கடந்த ஆண்டு ஜூன் 26ம் தேதி இறந்து விட்டார்.
இந்த நிலையில் ஜீவாவின் அண்ணன் கார்த்திக் (28) என்பவர் சமீபத்தில் விசாரித்த போது ஜீவாவின்
இறப்பில் சந்தேகம் இருப்பது தெரியவந்தது. ஜீவர் வாகனத்தில் சென்ற போது விபத்தில்
பாதிக்கப்படவில்லை. கடந்த ஆண்டு ஜூன் 16ம் தேதி இரவில் அவர் அதே பகுதி சேர்ந்த இளம்பெண்
ஒருவரை அவரின் வீட்டிற்குள் அத்துமீறி போட்டோ எடுத்துள்ளதாக தெரிகிறது.
அந்த பெண் குளிக்கும் போது ஜீவா போட்டோ எடுத்து விட்டதாக கூறப்படுகிறது. இந்த விவரம் அறிந்த அந்த பெண்ணின் உறவினர்கள் ஜீவாவை பிடித்து தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த அவர் முதலில் தனியார் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெற்றுள்ளார். பின்னர் அவர் கோவை அரசு மருத்துவமனைக்கு சென்றுள்ளதாக தெரிகிறது. மருத்துவமனைக்கு சென்ற ஜீவா, தன்னை தாக்கிய நபர்கள் குறித்து எந்த தகவலும் தெரிவிக்காமல் மறைத்து விட்டதாக தெரிகிறது.
இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி இறந்து விட்டார். இந்த வழக்கில் தாக்குதல் நடத்திய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது சகோதரரை அடித்து கொலை செய்திருக்கிறார்கள் என அவரின் அண்ணன் கார்த்திக் சந்தேகம் தெரிவித்துள்ளார் இதன் அடிப்படையில் சரவணம்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். ஏற்கனவே போக்குவரத்து புலனாய்வு பிரிவில் போடப்பட்ட இந்த வழக்கு ரத்து செய்யப்பட்டு புதிதாக சரவணம்பட்டி போலீஸ் ஸ்டேஷனில் சந்தேக மரணம் என வழக்கு பதிந்து விசாரணையை துவக்கியுள்ளனர்.
பாதிக்கப்பட்டவர் உண்மையை மறைத்து கூறியதால், தாக்குதல் நடத்தியவர்கள் இந்த வழக்கில் தப்பியிருப்பதாக தெரிகிறது. ஒரு ஆண்டிற்கு பின் விபத்து வழக்கு கொலை வழக்காக மாறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
