அதிக திட்டங்களை செய்தோம்: துணை முதல்வர் உதயநிதி பேச்சு..
கோவை ஆர்.எஸ்.புரம் மாநகராட்சி மேல்நிலைப்பள்ளி வளாக மைதானத்தில் 6,500 சதுர மீட்டர் பரப்பளவில் ரூ.9.67 கோடி மதிப்பீட்டில் சர்வதேச தரத்தில் செயற்கை புல்வெளி தளத்துடன் கூடிய ஹாக்கி மைதானம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த ஹாக்கி மைதானம் திறப்பு விழா இன்று நடந்தது. இந்நிகழ்ச்சியில், தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பங்கேற்று ஹாக்கி மைதானத்தை திறந்து வைத்தார். ரூ.31,72 கோடி மதிப்பிலான 12 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். ரூ.162.52 கோடி மதிப்பீட்டில் 107 முடிவற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்தார். 10,626 பயனாளிகளுக்கு ரூ. 136.45 கோடி மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை உதயநிதி ஸ்டாலின் வழங்கினார்.
விழாவில் உதயநிதி ஸ்டாலின் பேசுகையில்,
கலைஞருக்கும் முதல்வருக்கும் எப்போதும் கோவையின் மீது தனிப்பாசம் உள்ளது. இந்தியா முழுவதும் பெருமை கொள்ளும் வகையில் திராவிட மாடல் ஆட்சி நடக்கிறது. ‘விடியல் பயணம்’ திட்டம் மூலம் 4.5 ஆண்டில் சுமார் 900 கோடி பயணங்களை மகளிர் மேற்கொண்டு உள்ளனர். ஒவ்வொரு மகளிரும் மாதம் குறைந்தது 1,000 ரூபாய் வரை இந்த திட்டத்தின் மூலம் சேமிக்கிறார்கள்.
அரசுப்பள்ளியில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கக்கூடிய அனைத்து குழந்தைகளுக்கும் முதலமைச்சர் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், தினமும் சுமார் 20 லட்சம் குழந்தைகள் பயன்பெறுகின்றனர். புதுமைப்பெண் திட்டம் தமிழ் புதல்வன் மூலம் உயர்கல்வி படிக்கும் மாணவ, மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.
இதன்மூலம், ஒவ்வொரு ஆண்டும் 8 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகிறார்கள் சில நாட்களில் 10 லட்சம் அதிருவீன லேப்டாப் மாணவர்களுக்கு வழங்கப்பட உள்ளது.
கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் மூலம் 1 கோடியே 30 லட்சம் மகளிருக்கு மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படுகிறது. கோவை மாவட்டத்திற்கு தொடர்ந்து ஏராளமான நலத்திட்டங்களை முதல்வர் அறிவித்து அதனை செயல்படுத்தியும் வருகிறார்.
இனி சர்வதேச மற்றும் தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகள் சென்னை, மதுரை மட்டுமல்ல, கோவையிலும் அடிக்கடி நடக்கும். ஒண்டிப்புதூர் எஸ்ஐஎச்எஸ் காலனி- பகுதியில் உயர்மட்ட ரயில்வே மேம்பாலம் 56 கோடி ரூபாய் செலவில் கட்டி
திறந்து வைக்கப்படுகிறது. கோவை மாநகராட்சி பகுதியில் 2,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் பாதாள சாக்கடை பணிகள், 620 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 9 ஆயிரம் சாலை பணிகள் செய்யப்பட்டு இருக்கிறது. திராவிட மாடல் அரசின் திட்டங்களால் தமிழ்நாடு 11.19 சதவீதம் வளர்ச்சியோடு, இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது. கடந்த நான்கரை வருடங்களில் மட்டும் சுமார் 20 லட்சம் பட்டாக்களை அரசு வழங்கி இருக்கிறது. இதில் அமைச்சர் ராஜகண்ணப்பன், எம்பி கணபதி ராஜ்குமார், ஈஸ்வரசாமி, பிரகாஷ், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட பலர் பங்கேற்றனர்.
