அவிநாசி ரோட்டில் புதுசா நடை மேம்பாலம்..
கோவை அவிநாசி ரோடு மேம்பாலம் 1671 கோடி ரூபாய் செலவில் 10.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டது. இந்த மேம்பாலத்தில் பாதசாரிகள் கடப்பதற்கு எந்த இடங்களிலும் கடவு பாதை அமைக்கப்படவில்லை. ரோட்டின் ஒரு பகுதியில் இருந்து இன்னொரு பகுதிக்கு மேம்பாலத்தை கடந்து செல்ல முடியாமல் பொதுமக்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் மாநகராட்சி, மாநில நெடுஞ்சாலைத்துறை, தனியார் நிறுவனங்கள் மூலமாக நடை மேம்பாலம் அமைக்க திட்டமிட்டுள்ளது. முதல் கட்டமாக அவிநாசி ரோடு லட்சுமி மில்ஸ் பகுதியில் நடை மேம்பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது, தற்போதுள்ள ஜிடி நாயுடு மேம்பாலத்திற்கு கீழ்ப்பகுதியில் சென்று வரும் வகையில் இந்த நடை மேம்பாலம் அமைக்கப்படும்.
ஏற்கனவே பீளமேடு பகுதியில் தனியார் கல்லூரி பகுதியில் இரு கல்லூரிகளுக்கு சென்று வகையில் நடை மேம்பாலம் அமைக்கப்பட்டிருந்தது. தற்போது அதேபோல் மேம்பாலம் அமைக்க ஆலோசிக்கப்பட்டுள்ளது. இதற்கு சுமார் 2.5 கோடி ரூபாய் தேவைப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் எஸ்கலேட்டர் அமைக்கவும் ஏற்பாடு செய்யப்படும்.
பீளமேட்டில் அரவிந்த் கண் மருத்துவமனை அருகே இதேபோல் தனியார் நிறுவனத்தின் பங்களிப்பில் நடை மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது |இந்த பணிகள் நடத்த மெட்ரோ ரயில் நிர்வாகத்திடம் அனுமதி பெற வேண்டி இருக்கிறது. மாநில நெடுஞ்சாலைத்துறை இங்கே மேம்பாலம் அமைக்க டிசைன் ஒப்புதல் வழங்க வேண்டியிருக்கிறது. இந்த அனுமதி கிடைத்ததும் விரைவில் பணிகள் துவக்கப்படவுள்ளது.
