ஆதார் சேவா கேந்திரா மார்ச் மாதம் வருது..
கோவை மாவட்டத்தில் கலெக்டர் அலுவலகம், மாநகராட்சி அலுவலகம், மண்டல அலுவலகம், தாலூகா அலுவலகங்கள், 22 இ சேவை மையங்கள், 55 தபால் அலுவலங்கள் போன்றவற்றில் ஆதார் பதிவு மையங்கள் செயல்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக ஆதார் பதிவு மையங்களில் கூட்டம் அதிகமாகி வருகிறது. குறைந்த எண்ணிக்கையில் மட்டுமே ஆதார் சேவைகள் செய்யப்படுவதால் மக்கள் வெகு நேரம் காத்திருக்க வேண்டியுள்ளது.
மேலும் பொதுமக்கள் பலர் உள்ளூரில் உள்ள ஆதார் பதிவு மையங்களை விடுத்து மாவட்ட கலெக்டர் அலுவலகம், தாசில்தார் அலுவலகம் என கூட்டம் அதிகம் உள்ள பகுதிகளுக்கு செல்வதும் அதிகமாகி விட்டது. ஆதார் அட்டைகளில் பெயர் திருத்தம், பிறந்த தேதி திருத்தம் தொடர்பாக அதிகமான புகார்கள் வருகிறது. முகவரி மாற்றங்களை எளிதாக ஆன்லைன் சேவையில் பெற முடிகிறது.
ஆனால் பெயர், பிறந்த தேதி, செல்போன் எண் திருத்தம் ஆவணங்களை இணைத்து உரிய ஆதார் சேவை மையங்களை அணுக வேண்டியிருக்கிறது. மேலும் சிறார்களுக்கு ஆதார் பதிவு செய்தல், 10 ஆண்டு இடைவெளிக்கு பிறகு ஆதார் அட்டை தகவல்களை புதுப்பிக்க வேண்டும் என இந்திய தனித்துவ அடையாள ஆணையம் அறிவுறுத்தியுள்ளது.
ஆதார் சேவைகளை ஒரே இடத்தில் முறையாக முழுமையாக செய்ய கோவை மாவட்டத்தில் ஆதார் சேவா கேந்திரா (ஏஎஸ்கே) வரும் மார்ச் மாதம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அலுவலகம் உருவாக்கும் பணிகள் நடக்கிறது .
இந்த சேவா கேந்திரா தான் இனி கோவை மாவட்டத்தின் ஆதார் பணிகளுக்கான பிரதான இடமாக இருக்கும் . புதிய ஆதார் பதிவு அனைத்து வகையான திருத்தங்கள், பயோ மெட்ரிக் அப்டேட் விரல் ரேகை, கண் கருவிழி பதிவு, வாக ஆன்லாக் பாதுகாப்பு போன்றவை
செய்து தரப்படும் . ஆவணங்கள் இருந்தால் புதிதாக ஆதார் எடுத்து வழங்கப்படும். இதில் ஆதார் சேவைக்காக விண்ணப்பித்தால் கட்டாயம் அந்த சேவை நிறைவேற்றி தரப்படும் . ஆதார் சேவை பெற முடியவில்லை என மக்கள் இனி தவிக்க வேண்டியதில்லை. ஏனெனில் அதற்கான அனைத்து கட்டமைப்புகளுடன், குடிமகன்கள் தொடர்பான பின்னணி தகவல்களுடன் இந்த சேவா கேந்திரா செயல்படும். இதர துறைகளை ஒருங்கிணைத்து தகவல் பெறவும் ஆதார் சேவா கேந்திராவுக்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது. அரசின் எதாவது ஒரு ஆவணம் இருந்தாலும் அந்த நபர் ஆதார் சேவை பெற தேவையான வழிவகை செய்து தரப்படும் . இதன் மூலமாக பொதுமக்களின் காத்திருப்பு, அலைச்சலுக்கு தீர்வு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
