எஸ் ஐ ஆர் நீக்கம் 6 லட்சமாக அதிகரிக்கும்..!

கோவை மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் சுருக்க திருத்த (எஸ்ஐஆர்) பணிகள் நடக்கிறது, மாவட்ட அளவில் 32,25,198 வாக்காளர்கள் கடந்த முறை வெளியான பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். தற்போதைய கணக்கெடுப்பில் இறந்தவர்கள் 1,13,592 பேர், கணக்கெடுப்பின் போது இல்லாதவர்கள் (ஆப்சென்ட்) 76,096 பேர், வீடு, முகவரி மாறி சென்றவர்கள் 2,91,928 பேர், இரு முறை வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றவர்கள் 20,245 பேர், இதர வகையினர் 395 பேர் இருப்பதாக தெரியவந்தது. 5,02,256 பேர் பட்டியலில் இருந்து நீக்கப்படுவர். 27,22,942 பேர் மட்டுமே மாவட்ட அளவில் தகுதியான வாக்காளர்களாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. 96 சதவீதம் எஸ்ஐஆர் பணி முடிந்திருந்தது.

15.57 சதவீதம் பேர் வாக்காளர் பட்டியலில் இல்லை என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இறந்தவர்கள், இரட்டை பதிவு கொண்டவர்கள் தவிர மற்றவர்கள் வாக்காளர் திரும்ப இடம் பெற வேண்டுமானால், அவர்கள் தகுந்த ஆதாரங்களுடன் படிவம் 6ஐ பூர்த்தி செய்து வழங்க வேண்டும். அப்படி வழங்கினால் இவர்கள் திரும்ப வாக்காளர்களாக சேர்க்க முடியும். வரும் 14ம் தேதி வரை எஸ்ஐஆர் பணிகள் நடத்தப்படும். இதில் இதுவரை விண்ணப்ப படிவம் வழங்காதவர்கள் தங்கள் பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய படிவம் பூர்த்தி செய்து தரலாம். வரும் 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என தேர்தல் கமிஷன் அறிவித்தது.

இந்த நிலையில் மாவட்ட அளவில் திரும்ப நடந்த சூப்பர் செக்கிங் மூலமாக முகவரி மாறியவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகமாக இருப்பதாக தெரியவந்தது. இதனால் வாக்காளர்கள் எண்ணிக்கை 6 லட்சம் வரை குறைய வாய்ப்புள்ளதாக தெரிகிறது. இருப்பினும் வரும் 14ம் தேதி தான் இது தொடர்பான இறுதி விவரங்கள் தெரியும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *