கலெக்டர் அலுவலகத்தில் தற்கொலைக்கு முயன்ற தம்பதிகள்

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு கூட்டம் இன்று நடந்தது. இதில் ஆலாந்துறை பகுதி சேர்ந்த வெங்கடாசலம் (55), இவர் மனைவி நாகமணி ஆகியோர் புகார் மனு அளிக்க வந்தனர். அப்போது தங்களது கையில் இருந்த கரசினை இருவர் தலைமீது ஊற்றி தீ பற்ற வைக்க முயன்றனர். அதற்குள் அங்கே பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை பிடித்து தீப்பெட்டியை பறித்தனர். அவர்கள் கதறி அழுது கொண்டே போலீசாரிடம் கூறுகையில் எங்களுக்கு 45 ஆண்டுகளுக்கு முன்பு அரசு இலவசமாக ஒன்றை சென்ட் பட்டா கொடுத்தது. இதில் பட்டா எண் பிழையாக அச்சிடப்பட்டிருந்தது. இதை சரி செய்ய தாலுகா அலுவலகத்தில் பலமுறை நாங்கள் புகார் மனு அளித்தோம். இப்போது கூட அங்கே சென்று பிழையை சரி செய்து தருமாறு கேட்டோம் ஆனால் அவர்கள் சரி செய்ய மறுத்து விட்டார்கள். மேலும் எங்களது இடத்தை பக்கத்தில் உள்ளவர்கள் மூன்று பேர் அபகரிக்க முயற்சிக்கிறார்கள். நிம்மதியாக வாழ முடியாத சூழலில் நாங்கள் வேறு வழியின்றி தற்கொலை செய்ய இங்கே வந்தோம். இப்போது இல்லாவிட்டாலும் இன்னொரு முறை நாங்கள் தற்கொலை செய்வோம் என்றனர். கலெக்டர் அலுவலக வளாகத்தில் தம்பதிகள் தற்கொலைக்கு முயன்றது பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.
