‘குறைந்த ஓட்டு’ ஏரியாக்களில் இனி இருக்குது கவனிப்பு..!
கோவை மாவட்டத்தில் 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் கடந்த 2021ம் ஆண்டில் 46,42,228 வாக்காளர்கள் பட்டியலில் இடம் பெற்றிருந்தனர். அப்போதைய தேர்தலில் 33,55,447 பேர் அதாவது 72.30 சதவீதம் பேர் ஓட்டு போட்டனர். இதில் அதிமுகவினர் 15,10,170 ஓட்டு பெற்றனர்.
அதாவது 45 சதவீதம் ஓட்டு பெற்றிருந்தனர். திமுக 10,39,430 ஓட்டுக்கள் (31 சதவீதம்), மக்கள் நீதி மையம்” 2,46,671 ஓட்டுக்கள் (7.4 சதவீதம்), நாம் தமிழர் கட்சி 1,85,357 (5.5 சதவீதம்) ஒட்டுக்கள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 1,32,731 ஓட்டுக்கள் (4 சதவீதம்) பெற்றது. அதற்கு முந்தைய 2016ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் 44,28,459 வாக்காளர்கள் இருந்தனர். இவர்களில் 30,62,710 பேர் ஓட்டு போட்டனர் .
இதில் 69.20 சதவீதம் ஓட்டுக்கள் பதிவானது, வரும் சட்டமன்ற தேர்தலில் மாவட்ட அளவில் 10 சட்டமன்ற தேர்தலில், சுமார் 25 லட்சம் வாக்காளர் மட்டுமே பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். அடுத்த மாதம் 19ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படவுள்ளது. இந்த நிலையில் மாவட்ட அளவில் குறைந்த ஓட்டுக்கள் பதிவான ஓட்டு சாவடிகள் சிறப்பு கவனத்தில் ஆய்வு செய்ய தேர்தல் கமிஷன் உத்தரவு வழங்கியுள்ளது.
ஒவ்வொரு சட்டமன்ற தொகுதியிலும், ஒட்டு சாவடி வாரியாக பதிவான ஓட்டுக்கள் ஆய்வுக்கு எடுக்கப்படவுள்ளது. இதில் 55 சதவீதத்திற்கும் கீழ் பதிவான ஓட்டு சாவடிகள், 50 சதவீதம் பதிவான ஓட்டு சாவடிகள், அதற்கு கீழ் பதிவான ஓட்டு சாவடிகள் கண்டறியப்பட்டு அந்த ஏரியாக்களில் மக்களின் பிரச்னைகள், ஏன் ஓட்டு பதிவு குறைந்தது என விசாரணை நடத்தப்படும். ஓட்டு புறக்கணிப்பு நடந்ததா, அதன் பின்னணி விவரங்கள் குறித்து விசாரித்து தீர்வு காணப்படும்.
மாவட்ட அளவில் அனைத்து பகுதியிலும் குறிப்பாக 3563 ஓட்டு சாவடி பகுதிகளிலும் 100 சதவீத ஓட்டு பதிவு இலக்கை நோக்கி பணியாற்ற தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது.
தேர்தல் பிரிவினர் கூறுகையில், “கடந்த காலங்களில் இறந்த வாக்காளர்கள், முகவரி மாறியவர்கள் என ஏகப்பட்ட குழப்பம் இருந்தது. எஸ்ஐஆர் பணிக்கு பின்னர் வாக்காளர் பட்டியல் முழுமை பெற்றுள்ளது. 6.50 லட்சம் வாக்காளர்கள் நீக்கப்பட்டனர்.
நிஜ வாக்காளர்கள் மட்டுமே இடம் பெற்றுள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலுடன் ஒப்பிடும் போது நம் மாவட்டத்தில் 21 லட்சம் வாக்காளர்கள் பட்டியலில் இல்லை. கடந்த 25 ஆண்டு காலத்தில் இருந்து நீக்கப்படாமல் இருந்தவர்கள் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்பட்டனர்.
இனி, வாக்காளர்களை எளிதில் கண்டறியலாம். வெளியூர், வெளி மாநில வாக்காளர்கள் என்ற பிரச்னை கிடையாது. ஒரு ஓட்டுசாவடிக்கு உட்பட்ட வீதிகளில் 300 முதல் 400 வீடுகள் தான் இருக்கும். 1200 வாக்காளர்களுக்கும் குறைவாக தான் இருப்பார்கள்.
எனவே ஓட்டு போட வரவழைப்பது எளிதானது. குறைந்த ஒட்டு ஏரியாக்கள் சென்சிடிவ் எல்லைக்குள் வைக்கப்படும் . இங்கே அதிக சதவீத ஓட்டுக்கள் பதிவாகும் வகையில் விழிப்புணர்வு நடத்தப்படும் என்றனர்.
