கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: பிரியாணி புரோட்டா விலை உயர்வு..!

வணிக கேஸ் சிலிண்டர் அட்ரஸ் பற்றாக்குறை மாநில அளவில் அதிகரித்துள்ளது . கோவை மாவட்டத்தில் சிலிண்டர் கிடைப்பது அரிதாகிவிட்டது.

இதனால் இருப்பில் உள்ள சிலிண்டர்களை வைத்து சமையல் செய்து உணவு பண்டங்களை விற்பனை செய்ய வேண்டிய நிலைமை உருவாகியுள்ளது. நகரில் உள்ள 500க்கும் மேற்பட்ட பெரிய ஹோட்டல்களில் பிரதானமான மக்கள் விரும்பி சாப்பிடும் உணவுகள் செய்ய முடியாத சூழல் இருப்பதாக அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளது.

இருப்பினும் ஹோட்டல்களில் சாப்பிட பொதுமக்கள் வழக்கம்போல் கூட்டமாக குவிந்து வருகிறார்கள். வணிக சிலிண்டர் பற்றாக்குறை நிலவி வரும் சூழலில் சில ஹோட்டல்கள் தங்களது உணவு பொருட்களின் விலையை உயர்த்தி உள்ளது .

குறிப்பாக பிரியாணி, புரோட்டா சில்லி சிக்கன், ப்ரை , மட்டன் சுக்கா தோசை , ரோஸ்ட் போன்றவற்றின் விலை பத்து ரூபாய் முதல் 30 ரூபாய் வரை அதிகரிக்கப்பட்டுள்ளது. தட்டுப்பாடு தொடர்ந்தால் மேலும் விலை உயர்வு ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.

3 ஆயிரம் ஹோட்டல்கள் மூடல்

சில சிறிய மற்றும் நடுத்தர ஹோட்டல்கள் செயல்பட முடியாத அளவில் மூடப்பட்டுள்ளது . மாவட்ட அளவில் 3 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஹோட்டல்கள் சிலிண்டர் பற்றாக்குறையால் மூடப்பட்டுள்ளது. பல இடங்களில் தள்ளுவண்டி கடைகள் மற்றும் இரவு நேர டிபன் கடைகள் முடங்கி போய் உள்ளது.

வணிக சிலிண்டர் பிரச்சனைக்கு இதுவரை தீர்வு காணப்படவில்லை. வீட்டு உபயோக சிலிண்டர்கள் சில நாட்கள் தாமதமானாலும் கிடைத்து வருகிறது. இந்த சிலிண்டரும் தட்டுப்பாடு ஏற்படும் என்ற அச்சம் பொதுமக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது. சிலர் வீட்டு உபயோக சிலிண்டர்களை வணிக நோக்கத்திற்கு பயன்படுத்தி வருகின்றனர்.

இதை தடுக்க நடவடிக்கை எடுக்க எந்த முயற்சியும் இதுவரை மேற்கொள்ளப்படவில்லை. பல இடங்களில் ஹோட்டல்கள் வணிக உணவு கூடங்களில் விறகு அடுப்பு சமையல் பரவலாக அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக விறகு விலையும் வெகுவாக உயர்ந்து வருகிறது. தொடர்ந்து பொதுமக்களுக்கு நெருக்கடி நிலை ஏற்படுவதால் மத்திய அரசு இதற்கு தீர்வு காண வேண்டும் என அனைத்து தரப்பு மக்களும் எதிர்பார்த்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *