கோவையில் அனுமதியற்ற போஸ்டர்களை கிழிக்க தேர்தல் கமிஷன் உத்தரவு
கோவை மாவட்டத்தில் அரசு துறை, அரசு சார்பு துறைகளின் சுவர்கள், பொது இடங்கள், மேம்பால சுவர்கள், மின்சார கம்பங்கள், மரங்கள் என ஏகப்பட்ட இடங்களில் அரசியல் கட்சி அறிவிப்புகள் மற்றும் தனியார் நிறுவனங்களின் போஸ்டர்கள் அதிகமாகி விட்டது.
மேம்பால சுவர்களில் கட்சிகளின் போஸ்டர்கள் அதிகமாகி விட்டது. கலெக்டர் அலுவலகம், பிஎஸ்என்எல் அலுவலகம், தெற்கு, வடக்கு தாசில்தார் அலுவலகம், ஜிஎச், பொதுப்பணித்துறை அலுவலகம் என ஏகப்பட்ட அலுவலகங்களில் போஸ்டர்கள் அகற்றிய பின்னரும், மீண்டும் கட்சி போஸ்டர்கள் ஒட்டப்பட்டதாக புகார் பெறப்பட்டது.
அவினாசி ரோடு மேம்பால சுவர்களில் கிழிக்கப்படாமல் ஏகப்பட்ட போஸ்டர்கள் இருக்கிறது. தேர்தல் தேதி அறிவிக்கப்படவுள்ள நிலையில், போஸ்டர்கள் இருக்க கூடாது என தேர்தல் கமிஷன் கறாராக அறிவித்துள்ளது. போஸ்டர்களை கிழிக்கும் பொறுப்பு மாநகராட்சி, உள்ளாட்சிகள் மட்டுமின்றி சம்பந்தப்பட்ட துறையினருக்கும் உள்ளது என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
போஸ்டர், பேனர்களை விரைவாக அகற்ற வேண்டும். இல்லாவிட்டால் தேர்தல் தேதி அறிவிப்புக்கு பின்னர், கட்சி போஸ்டர்கள் ஒட்டியிருப்பது தெரிந்தால் அந்தந்த கட்சியின் கணக்கில் செலவில் அகற்றும் பணி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன் கூட்டியே கிழித்து விட்டால் செலவு மிச்சமாகும். இல்லாவிட்டால் போஸ்டர் அகற்றுவது, சுத்தம் செய்வது என கூடுதலாக செலாகும் என தேர்தல் பிரிவினர் அறிவுறுத்தியுள்ளனர்.
