கோவையில் ஒரே ஆண்டில் 14432 பேருக்கு புதிய ரேஷன் கார்டு..!
கோவை மாவட்டத்தில் 1405 ரேஷன் கடைகள் உள்ளது. 11,66,078 ரேஷன்கார்டுகள் பயன்பாட்டில் இருக்கிறது.
34,42,968 பேர் ரேஷன் பொருட்கள் பயனாளிகளாக உள்ளனர். மாதத்திற்கு சுமார் 20 ஆயிரம் டன் அரிசி, 1200 டன் துவரம்பருப்பு, 600 டன் சர்க்கரை, 9.76 லட்சம் பாமாயில் பாக்கெட் போன்றவை ஓதுக்கீடு செய்து வழங்கப்பட்டு வருகிறது.
ரேஷன் கார்டு கேட்டு குடிமைப்பொருள் வழங்கல் தாசில்தார் அலுவலகங்களில் விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது. ஆன்லைன் மூலமாக புதிய கார்டு கேட்டும் ஏற்கனவே பயன்பாட்டில் உள்ள ரேஷன்கார்டுகளில் உள்ள உறுப்பினர்கள் தங்களது பெயர்களை நீக்கம் செய்யவும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
கார்டுகளில் பெயர் நீக்கம் செய்தவர்கள் புதிதாக தனி கார்டு வழங்க வேண்டுகோள் விடுத்து வருகின்றனர் . மாவட்ட அளவில் கடந்த ஆண்டு ஜனவரி முதல் டிசம்பர் வரை 21,856 பேர் புதிய ரேஷன் கேட்டு விண்ணப்பித்தனர்.
இதில் 14,432 பேருக்கு ரேஷன் கார்டு வழங்க ஒப்புதல் தரப்பட்டது. இதில் இதுவரை 13,132 பேருக்கு முறைப்படி ரேஷன் கார்டு அச்சடித்து வழங்கப்பட்டது, இதர நபர்களுக்கு ரேஷன் கார்டுகள் அச்சடித்தல் பணியில் இருக்கிறது .
விரைவில் ரேஷன் கார்டுகள் வழங்கப்படும். மாவட்ட அளவில் ஆன்லைன். ஆப் லைன் மூலமாக புதிய ரேஷன் கார்டு கேட்டு விண்ணப்பங்கள் குவிந்து வருகிறது. குறிப்பாக குடும்பத்திலிருந்து பிரிந்தவர்கள் திருமணமாகி சென்றவர்கள் புதிய ரேஷன் கார்டு விண்ணப்பித்து வருகின்றனர்.
கூடுதல் ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கையால் பயனாளிகளின் எண்ணிக்கையும் உயர்ந்து வருகிறது . மாவட்ட அளவில் ரேஷன் பயனாளிகள் எண்ணிக்கை ஒரே ஆண்டில் 40 ஆயிரத்திற்கும் மேல் அதிகமாகி விட்டது.
வெளியூர், வெளி மாநிலங்களில் இருந்து கோவை வந்து தங்கி வேலை செய்யும். ரேஷன்கார்டுதாரர்களுக்கும் உணவு பொருட்கள் வழங்கப்படுகிறது. இதன் மூலமாக பல ஆயிரம் பேர் பயன்பெற்று வருகிறார்கள்.
கோவை மாவட்ட வழங்கல் அலுவலர் விஸ்வநாதன் கூறுகையில், “ரேஷன் கார்டுகள் முறைப்படி ஆய்வு செய்து வழங்கப்படுகிறது. முறையான ஆவணங்களுடன் விண்ணப்பித்தால் போதுமானது.
மாவட்ட அளவில், புதிய ரேஷன்கார்டுகளுக்கான விண்ணப்பங்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கிறது. தகுதியில்லாத விண்ணப்பங்களை நிராகரித்து விடுகிறோம். தனி நபர்களுக்கு முறையான ஆவணங்கள் இருந்தால் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகிறது. ரேஷன் பொருட்கள் தடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. ” என்றார்.
