கோவையில் ஓட்டுக்கு லஞ்சம்: கண்டறிய கலெக்டர் தலைமையில் ஆலோசனை
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மாவட்ட அளவிலான நுண்கண்காணிப்பு குழுவின் கூட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் , கோவை மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் கோவை மாவட்ட வன அலுவலர் வெங்கடேஷ் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வருமானவரித்துறை, சுங்கவரித்துறை, மத்திய வருவாய் துறை, வணிகவரித்துறை, சரக்கு மற்றும் சேவை வரிகள் துறை, காவல் துறை, ரயில்வே காவல்துறை, ரயில்வே பாதுகாப்பு படை, மதுவிலக்கு பிரிவு காவல்துறை, துணை ஆணையர் (கலால்), முதுநிலை மண்டல மேலாளர் (டாஸ்மாக்), மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் மற்றும் அனைத்து தனியார் துறை வங்கி மேலாளர்கள், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில், தேர்தல் காலத்தில் வாக்காளர்களை கவரும் விதமாக பல்வேறு பரிசு பொருட்கள், தங்க நகைகள், வீட்டு உபயோக பொருட்கள், போதைப் பொருட்கள் மற்றும் ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கப்பட வாய்ப்புகள் உள்ளதால் அவற்றை முற்றிலும் தடுத்திடும் வகையில் அனைத்து துறைகளும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் கண்காணிப்பு பணியினை தீவிர படுத்த வேண்டும்.
மேலும், அனைத்து வங்கிகளும் ஒரு இலட்சம் ரூபாய்க்கு மேல் பரிவர்த்தனை செய்யும் வங்கி கணக்குகள் குறித்து தினந்தோறும் மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அறிக்கை அனுப்பி வைக்கப்பட வேண்டும்
ஒரே வங்கி கணக்கிலிருந்து பல்வேறு வங்கி கணக்குகளுக்கு ஒரு குறிப்பிட்ட தொகை பரிமாற்றம் செய்யப்படும்போது அது குறித்த விவரங்களையும் மாவட்ட தேர்தல் பிரிவிற்கு சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும், சட்டமன்றத் தேர்தலினை நியாயமான மற்றும் நேர்மையான முறையில் நடத்திட அனைத்து துறை அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது.
