கோவையில் கனிமம் கடத்தல் கண்காணிக்க அமைக்கப்பட்ட ஏஐ கேமராக்கள் முடக்கம்..!
கோவை மாவட்டத்தில் கனிமப் பொருட்கள் கடத்தல் மற்றும் கல்குவாரிகளில் முறைகேடுகளை கண்டறிய கனிம வாகனங்களை கண்காணிக்க மாவட்ட அளவில் முக்கிய செக்போஸ்ட்களில், மாவட்ட எல்லை சந்திப்பு ரோடுகளில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டது.
இந்த கேமராக்களை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் இருந்து நேரடியாக கண்காணிக்க வசதி செய்யப்பட்டது.
கடந்த 3ம்தேதி இந்த கண்காணிப்பு கேமரா மற்றும் கட்டுப்பாட்டு அறையை கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார் திறந்து வைத்தார்.
இதில் 108 ஏஐ கண்காணிப்பு கேமராக்களும் 24 ANPR என்ற வாகன பதிவு எண் கண்டறியும் கேமராக்களும் அமைக்கப்பட்டிருந்தது .
மொத்தம் 132 கேமராக்கள் பொருத்தப்பட்டது. வாளையார், வேலந்தாவளம், மாங்கரை, ஆனைகட்டி, கிணத்துக்கடவு, பேரூர் உள்ளிட்ட பகுதிகளில் இந்த கேமராக்கள் அமைக்கப்பட்டு வாகனங்களை தொடர்ந்து கண்காணிக்க உத்தரவிடப்பட்டது. ஆனால் கேமரா பொருத்திய சில மணி நேரத்திலேயே கண்காணிப்பு கேமராக்கள் முறையாக இயங்கவில்லை.
குறிப்பாக மாவட்ட எல்லை செக் போஸ்டர்களில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் இயக்கப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. தொழில்நுட்ப கோளாறு காரணமாக கேமராக்கள் சில இயங்கவில்லை என கூறப்பட்டது. ஆனால் காருண்யா நகர் உள்பட சில பகுதிகளில் கேமராக்கள் இணைப்பு வழங்கப்படாமல் இருப்பதாக தெரிகிறது. நோ கனெக்சன் என கண்காணிப்பு கேமரா டிஸ்பிளே பகுதியில் காட்சி வருகிறது.
புதிய கேமராக்கள் அதுவும் ஏ ஐ வசதி கொண்ட கேமராக்கள் இயங்காமல் முடக்கப்பட்டது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தி இருக்கிறது. கோவை மாவட்டத்தில் கனிமவள கடத்தல் மற்றும் முறைகேடுகள் தொடர்பாக பொதுமக்கள் புகார் அளிக்க
Kovai mining surveillance என்ற பெயரில் செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது. இதில் பெறப்பட்ட புகார்கள் மீதும் முறையான நடவடிக்கையை எடுக்கப்படவில்லை.
இது தவிர
18002333995 என்ற தொலைபேசி எண்ணும் கனிமவளத்துறை அறிவித்துள்ளது. பொதுமக்கள் நேரடியாக புகார் தருவதற்காக அறிவிக்கப்பட்ட செயலி தொலைபேசி எண்கள் மற்றும் முறைகேடுகளை நேரடியாக கண்டறிய அமைக்கப்பட்ட ஏஐ கேமராக்கள் செயல்பாடுகளை கனிமவளத் துறையினர் கண்டுகொள்ளாமல்முடக்கி வருவதாக சமூக ஆர்வலர்கள் புகார் தெரிவித்துள்ளனர்.
தவறுகள் நடக்காமல் தடுக்க கனிமவளத்துறை தீவிரம் காட்ட வேண்டும். வெளி மாநிலங்களுக்கு கொண்டு செல்லப்படும் கனிமங்களுக்கு முறையாக வரிகள் விதிக்கப்படுகிறதா ஓவர் லோடு செல்கிறதா என கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒரே வாகன பதிவு எண்ணில் சில லாரிகள் இயங்குவதாக தெரிகிறது. இதை கண்காணிப்பு கேமரா மூலமாக எளிதில் கண்டறிய முடியும். கனிமவளத்துறை கேமராக்கள் இருந்தும் அதை முடக்குவது சரியல்ல என சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
