கோவையில் சத்துணவு ஊழியர்களை சந்தித்து பேசிய நைனார் நாகேந்திரன்
சத்துணவு ஊழியர்களிடம் ஆறுதல் கூறி பேசிய நயினார் நாகேந்திரன்..
காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். இளநிலை உதவியாளர் நிலையில் பணி செய்பவர்களுக்கு 15,500 ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோவை தெற்கு தாசில்தார் அலுவலகம் முன்பு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
விடிய விடிய அங்கேயே தங்கி சமையல் செய்து சாப்பிட்டு போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர். இன்று 10 நாள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்களிடம் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் உள்ளிட்ட பாஜக நிர்வாகிகள் நேரில் சந்தித்து அவர்களது கோரிக்கைகளை கேட்டறிந்தனர்.
அப்போது, நயினார் நாகேந்திரனிடம் தங்களுக்கு ஒன்றிய அரசு நிதி ஒதுக்காததால் தான் தங்களது கோரிக்கைகள் நிறைவேறாமல் இருப்பதாகவும், ஒன்றிய அரசிடம் கேட்டால் மாநில அரசிடம் கேட்குமாறு அலைகழிப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.
அப்போது நைனார் நாகேந்திரன் உங்களுக்கு தேர்தல் வாக்குறுதி கொடுத்தது பாஜக அரசு இல்லை . எனவே மாநில அரசிடம் தான் நீங்கள் முறையிட வேண்டும் என தெரிவித்தார். இதற்கு சத்துணவு அங்கன்வாடி ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து சரமாரியாக கேள்வி கேட்டனர். தொடர்ந்து அவர்களிடம் பேச முடியாமல் சிறிது நேரம் அமர்ந்திருந்த நயினார் நாகேந்திரன் அங்கிருந்து கிளம்பினார்
அப்போது இது குறித்து அவரிடம் நிருபர்கள் கேள்விகள் கேட்க முயன்ற போது அவர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.
