கோவையில் டிரேடிங் ஆப் மூலம் பல கோடி ரூபாய் மோசடி..!
கோவை நகரில் பொது மக்களுக்கு whatsapp மூலமாகவும் சோசியல் மீடியாக்கள் மூலமாகவும் டிரேடிங் சம்பந்தமான மெசேஜ் அதிகமாக வருகிறது. குறைந்த முதலீட்டில் அதிக லாபம் பெறலாம் மாதந்தோறும் அதிக வட்டி வழங்கப்படும்.
வீட்டில் இருந்தபடி அதிக பணத்தை பெற டிரேடிங் முதலீடு உதவியாக இருக்கும் என தெரிவிக்கிறார்கள் இதை நம்பி முதலீடு செய்பவர்களுக்கு ஓரிரு மாதங்கள் உரிய தொகை வழங்கப்படுகிறது. அதற்கு பின்னர் அதிக முதலீட்டை பெற்று ஏமாற்றி வருகிறார்கள்.
கோவை புதூர் பகுதியை சேர்ந்த சுசித்ரா (27) என்பவர் டிரேடிங் ஆப் மூலமாக 49 லட்ச ரூபாய் முதலீடு செய்தார். இந்த முதலீட்டுக்கு முதல் இரண்டு மாதங்கள் சில ஆயிரம் ரூபாய் மட்டும் திரும்ப வழங்கப்பட்டது. அதற்குப் பிறகு பணம் வழங்கவில்லை. ஏமாற்றமடைந்த அவர் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார்.
இதேபோல் கோவையை சேர்ந்த வெங்கடாசலம் என்பவர் டிரேடிங் ஆப் மூலமாக பத்து லட்ச ரூபாய் முதலீடு செய்து ஏமாற்றம் அடைந்தார். கோவை நகரில் கடந்த இரண்டு மாதத்தில் 16 பேர் டிரேடிங் ஆப் மூலமாக 5 கோடி ரூபாய்க்கு அதிகமாக முதலீடு செய்து இழந்துள்ளனர். இது தொடர்பாக கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து டிரேடிங் ஆப் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.
கோவை மாநகர சைபர் கிரைம் போலீசார் கூறுகையில்,” சோசியல் மீடியாக்களில் வரும் டிரேடிங் ஆப் உண்மையானது அல்ல. இந்த செயலியை தற்காலிகமாக பணம் பறிக்கும் நோக்கத்தில் உருவாக்குகிறார்கள். இந்த செயலியில் பொதுமக்கள் தங்களது விபரங்களை தெரிவித்தால் வங்கி கணக்கு எண் பரிவர்த்தனை உள்ளிட்ட அனைத்து விவரங்களையும் குற்றவாளிகள் கண்டறிந்து விடுவார்கள்.
அதன் பின்னர் வங்கி கணக்கில் இருந்து பணத்தை எடுத்து விடுகிறார்கள். வாடிக்கையாளர்களை கவர்வதற்காக முதல் ஓரிரு முறை ஆயிரம் ரூபாய் இரண்டாயிரம் ரூபாய் என வட்டி தொகை வழங்குவார்கள். அதற்குப் பிறகு எதுவும் வழங்க மாட்டார்கள். இந்த விவரங்கள் தொடர்பாக சைபர் கிரைம் வெப்சைட் மூலமாக விழிப்புணர்வு ஏற்படுத்தியும் படித்த நபர்கள் தொடர்ந்து ஏமாந்து வருகிறார்கள்.
இந்த டிரேடிங் ஆப் குற்றவாளிகளை பிடிக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம் என்றனர்.
