கோவையில் நகை கடையில் 40 பவுன் கொள்ளை..!

ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்தவர் ரமேஷ் (48). இவர் கோவை சிங்காநல்லூர் வசந்தா மில் பகுதியில் தங்க நகை அடகு கடை, நகை விற்பனை மற்றும் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். கடை பின்புறம் இவரது வீடு உள்ளது. நேற்று மகா சிவராத்திரியை முன்னிட்டு ரமேஷ் கடைக்கு விடுமுறை அளித்துவிட்டு இரவு குடும்பத்தினருடன் வெள்ளலூர் பகுதியில் உள்ள கோயிலுக்கு சென்று விட்டார்.

இன்று காலை அவர் தனது வீட்டிற்கு திரும்ப வந்தார். அப்போது இவரது கடையின் பின்புற ஷட்டர் உடைக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது. கடையில் இருந்த 40 பவுன் தங்க நகைகள் மற்றும் 5 கிலோ வெள்ளி நகைகளை கொள்ளையடித்து விட்டு மர்ம நபர்கள் தப்பிச் சென்றனர்.

இதுகுறித்து உடனடியாக சிங்காநல்லூர் போலீசாருக்கு ரமேஷ் தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், மோப்பநாய் மற்றும் தடயவியல் நிபுணர்களுடன் கடையில் சோதனை நடத்தினர். அப்போது தடயவியல் நிபுணர்கள் அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை சேகரித்தனர் .

கடையில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமரா மற்றும் அதன் சுற்றுப் பகுதியில் இருந்த கேமரா காட்சி பதிவுகளை வைத்து விசாரித்து வருகின்றனர். கொள்ளையடிக்கப்பட்ட நகைகளின் மதிப்பு ரூ.50 லட்சத்திற்கும் மேல் இருக்கும் என கூறப்படுகிறது. கடையில் கண்காணிப்பு கேமராவில் கொள்ளையர்கள் வந்து சென்ற காட்சி பதிவாகி உள்ளது.

இவர்கள் வெளிமாநில திருடர்களாக இருக்கலாம் என போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர். திட்டமிட்டு நோட்டமிட்டு இந்த கொள்ளை நடத்தப்பட்டு இருக்கலாம் என தெரிகிறது. இவர்களை பிடிக்க தனிப்படை போலீசார் அமைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *