கோவையில் பதட்ட ஓட்டு சாவடிகளில் பாதுகாப்பு பணி..போலீசாருக்கு பயிற்சி வகுப்பு
கோவை ஆர்.எஸ் புரம் கலையரங்கில் கோவை மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தலில் பதட்ட ஓட்டு சாவடிகளை கையாளும் முறை தொடர்பாக மண்டல வாக்குசாவடி அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பு இன்று நடந்தது.
இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், போலீஸ் துணை கமிஷனர் திவ்யா, தேர்தல் பிரிவு கலெக்டரின் நேர்முக உதவியாளர் மகேஸ்வரி, தாசில்தார் தணிகைவேல் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் தேர்தல் பிரிவினர் பயிற்சி வழங்கி பேசுகையில், ” கோவை மாவட்ட அளவில் 3524 ஓட்டு சாவடிகள் இருக்கிறது.
இதில் பதட்டமான ஓட்டு சாவடிகள் தேர்வு நடக்கிறது. சுமார் 20 சதவீத ஓட்டு சாவடிகள் பதட்ட எல்லைக்குள் வரக்கூடும். இங்கே கூடுதல் போலீஸ் பாதுகாப்பு, கண்காணிப்பு தேவை. ஓட்டு பதிவு நாளில் இந்த ஓட்டு சாவடி ஏரியாக்களில் கூட்டம் கூடுவதை தவிர்க்க வேண்டும்.
பூத் ஏஜன்டுகளை முறையாக கண்காணிக்க வேண்டும். துணை ராணுவத்தினர் பணியில் இருப்பார்கள். இந்த ஏரியா ஓட்டு சாவடிகள் கட்டுபாட்டு அறையில் உள்ள கேமராக்கள் மூலமாக தொடர்ந்து கண்காணிக்கப்படும். ஒட்டு சாவடியில் வாக்குவாதம் செய்யும் நபர்கள், தகராறு செய்யும் நபர்களை வெளியேற்ற வேண்டும்.
எந்த காரணத்தை முன்னிட்டும் ஓட்டு பதிவு பாதிக்க கூடாது. பதட்ட ஒட்டு சாவடிகளில் அதிக அனுபவம் வாய்ந்த தேர்தல் அலுவலர்களை பணியில் நியமிக்க வேண்டும்,” என தெரிவித்தனர்.
