கோவையில் பரபரப்பு.. பழிக்கு பழி வாங்க வாலிபரை விரட்டி அரிவாளால் வெட்டிய ரவுடி
கோவை அம்மன் குளம் ஹவுசிங் யூனிட் பகுதியை சேர்ந்த வெள்ளிங்கிரி என்பவரது மகன் பார்த்திபன் (26). கூலி தொழிலாளி.
கடந்த 2016 ஆம் ஆண்டு அம்மன் குளம் ஹவுசிங் யூனிட் பகுதியில் கபடி போட்டி நடந்தது. அப்போது அங்கே கபடி விளையாடி கொண்டிருந்த பார்த்திபனின் நெருங்கிய கூட்டாளியான ஸ்பைக் என்கிற நவீன் குமார் (25) என்பவருக்கும்
அம்மன் குளம் பகுதியை சேர்ந்த ஜப்பான் என்கிற ஹரிஹரன் (30) என்பவருக்கும் மோதல் ஏற்பட்டது .
இதில் ஹரிஹரன் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து நவீன் குமாரை கத்தியால் குத்தி கொலை செய்தார் . இந்த கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்த ராமநாதபுரம் போலீசார் ஹரிஹரனை கைது செய்தனர். ஹரிஹரன் ஏற்கனவே பல்வேறு குற்றங்களில் ஈடுபட்ட ரௌடி என தெரியவந்தது.
ஹரிஹரன் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கு தொடர்பான விசாரணை கோவை நீதிமன்றத்தில் விசாரணையில் இருந்தது. ஜாமீனில் இருந்த ஹரிஹரன் அவ்வப்போது கோர்ட்டில் ஆஜராகி வந்தார்.
இந்த நிலையில் பார்த்திபன் தனது கூட்டாளியின் கொலைக்கு பழி வாங்க திட்டமிட்டு காத்திருந்தார். கடந்த 2023 ஆம் ஆண்டு கோவை கோர்ட் வளாகத்துக்கு வந்த ஹரிஹரனை சுற்றி வளைத்த பார்த்திபன் கத்தியால் குத்தி கொலை செய்ய முயன்றார். ஆனால் ஹரிஹரன் காயங்களுடன் உயிர் தப்பினார்.
இது தொடர்பாக கோவை ரேஸ் கோர்ஸ் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.
இந்த நிலையில் நவீன் குமார் கொலை வழக்கில் ஹரிஹரனுக்கு நீதிமன்றத்தில் தண்டனை வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து கோவை சிறையில் ஹரிஹரன் தொடர்ந்து அடைக்கப்பட்டிருந்தார். சமீபத்தில் ஜாமீன் பெற்ற ஹரிஹரன் சிறையிலிருந்து வெளியே வந்தார் . தன்னை நீதிமன்ற வளாகம் அருகே கொலை செய்ய முயன்ற
பார்த்திபனை பழிவாங்க திட்டமிட்டு அவர் இன்று மதியம் அரிவாளோடு தேடி சுற்றிக் கொண்டிருந்தார் .
அப்போது அம்மன் குளம் பகுதியில் பார்த்திபன் தனது நண்பர் கிருஷ்ணமூர்த்தி (30) உடன் நடந்து சென்று கொண்டிருந்தார் . இரண்டு பேரையும் வழிமறித்த ஹரிஹரன் தன்னிடம் இருந்து அரிவாளால் பார்த்திபனை ஓட ஓட விரட்டி வெட்டினார். இதில் பார்த்திபன் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது .உடன் வந்த கிருஷ்ணமூர்த்திக்கும் முகத்தில் காயம் ஏற்பட்டது . இதை பார்த்து அந்த பகுதி பொதுமக்கள் ரத்த வெள்ளத்தில் கிடந்த இரண்டு பேரையும் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர் . அவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது .
இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் வழக்கு பதிவு செய்து ஹரிஹரனை கைது செய்தனர். அவருக்கு உதவிய கண்ணன் என்பவரையும் கைது செய்தனர்.
பழிக்கு பழி வாங்க நடு ரோட்டில் நடந்த இந்த கொலை முயற்சி கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
