கோவையில் பழைய ஓட்டு பதிவு பேப்பர்கள் விரைவில் அழிப்பு
கோவை மாவட்டத்தில் ஓட்டு பதிவு மெசின்கள், சின்னங்கள் காட்டும் கருவி மற்றும் கவுண்டிங் யூனிட் போன்றவை தெற்கு தாலூகா வளாகத்தில் உள்ள இந்திய தேர்தல் கமிஷன் சேமிப்பு கிடங்கில் பாதுகாப்பாக ஸ்டிராங்க் ரூமில் வைக்கப்பட்டுள்ளது. தேர்தலின் போது பயன்படுத்திய பேப்பர்கள், ஆவணங்கள் அனைத்தும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் உள்ள கருவூல பாதுகாப்பு குடோனில் வைக்கப்பட்டிருந்தது.
கடந்த 10 ஆண்டிற்கு மேலான ஆவணங்கள் இந்த குடோனில் தகர பெட்டியில் போட்டு வைக்கப்பட்டிருந்தது. குறிப்பாக தபால் ஓட்டுகள், இதர படிவங்கள், ஓட்டு பதிவின் போது பயன்படுத்திய ஆவணங்கள் இந்த பெட்டியில் இருக்கிறது. இவற்றை தேர்தல் பிரிவினர் அந்தந்த சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் நடத்தும் அலுவலர் (இஆர்ஓ), உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் (ஏஆர்ஓ) அலுவலங்களுக்கு இன்று அனுப்பி வைத்தனர்.
சட்டமன்ற தொகுதி வாரியாக கோட்டாச்சியர் மற்றும் தாலூகா அலுவலங்களில் இந்த தேர்தல் பேப்பர்கள், ஆவணங்கள் வைக்கப்பட்டிருக்கும். இந்த ஆவணங்கள் இனி எதற்கும் தேவைப்படாது. எனவே இவற்றை கழிவாக நீக்கம் செய்ய தேர்தல் கமிஷனின் ஒப்புதல் பெற திட்டமிட்டுள்ளனர். இந்த ஆவணங்கள் முறைப்படி டெண்டர் விட்டு அகற்றப்படும். மாவட்ட கருவூலத்திலிருந்து பல நூறு தகர பெட்டிகளில் தேர்தல் ஆவணங்கள் அனுப்பி வைக்க்பட்டது. இதேபோல் கடந்த கால தேர்தல்களில் பயன்படுத்தப்பட்ட ஓட்டு மெசின்களும் விரைவில் மறு சீரமைப்பு (ரீ செட்டிங்) செய்யப்படவுள்ளது. இதற்கான தொழில் நுட்ப குழுவினர் விரைவில் பெங்களூரில் இருந்து கோவைக்கு வரவுள்ளனர்.
