கோவையில் பிளாட்பாரத்தை அபகரித்த கடைகள்.. வேடிக்கை பார்க்கும் அதிகாரிகள்..!

பெரிய கடை வீதி போத்தீஸ் அருகே அபகரிக்கப்பட்ட பிளாட்பார பாதை..

கோவை மாநகர எல்லையில் 5 தேசிய நெடுஞ்சாலைகள், 57.2 கிலோ மீட்டர் நீளமுடைய 6 மாநில நெடுஞ்சாலை, 77 கிலோ மீட்டர் நீளமுடைய முக்கிய மாவட்ட சாலை மற்றும் 40.7 கிலோ மீட்டர் நீளமுடைய இதர மாவட்ட சாலை, மாநகராட்சி கட்டுபாட்டில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வீதிகளில் ரோடுகள் அமைந்துள்ளது.

போக்குவரத்து நிர்வாகம் மற்றும் சாலைப்பாதுகாப்பு குறித்து கோவை மாநகர போலீசார் பல்வேறு நடவடிக்கைகளையும் புதிய முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.

மாநகரில் பிளாட்பாரங்களில் மக்கள் நடக்க முடியாத அளவிற்கு நெருக்கடி இருப்பதாக சாலை பாதுகாப்பு கமிட்டியில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்கள் நடைபாதையை தவிர்த்து பிரதான ரோடு, இணைப்பு ரோடு பொது இடங்களை பார்க்கிங் பகுதியாகவும், நடைபாதையாகவும் பயன்படுத்தி வரும் சூழல் உருவாகியுள்ளது.

மாவட்ட நிர்வாகம் நெடுஞ்சாலை, மாநகராட்சி ஒருங்கிணைந்து செயல்பட்டால் பிளாட்பாரம் ஆக்கிரமிப்பு களைய முடியும். மக்கள் பல இடங்களில் குறிப்பாக பஸ் ஸ்டாப், பொது இடங்கள், இணைப்பு ரோட்டை கடக்க முடியாமல் சிரமப்படுகின்றனர்.

ரோடு கடக்கும் இடங்களில் விபத்து அபாய பகுதிகளாக மாறி வருகிறது. பாதசாரிகள் சுலபமாக போக்குவரத்து மிகுந்த சாலைகளை கடப்பதற்காக அவர்களே உபயோகித்துக்கொள்ளும் வகையில் பெலிக்கான் போக்குவரத்து சிக்னல்களை காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் அருகில்

பார்க்கேட் 100 அடி சாலையில் 11வது வீதி, சுங்கம் சந்திப்பு, வரதராஜா மில், பி.எஸ்.ஜி தொழில்நுட்ப கல்லூரி, கண்பதி பஸ் ஸ்டாண்ட் துடியலூர் மற்றும் புரூக்பீல்ஸ் மால், அவினாசி சாலையில் கிருஷ்ணம்மாள் மகளிர் கல்லூரி சி.ஐ.டி கல்லூரி அருகே மற்றும் கரும்புக்கடை சாரமேடு சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் அமைக்கப்பட்டது.

ஆனால் பெலிக்கன் சிக்னல்கள் முறையாக இருந்தும் மக்கள் பயன்பாட்டை மீறி வாகனங்கள் செல்வதாக புகார் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நகரில் பிளாட்பார ஆக்கிரமிப்புகளை அகற்றவும், சாலை கடக்க ஏதுவான சூழலை ஏற்படுத்தவும் போலீசார், உள்ளாட்சிகள், நெடுஞ்சாலைத்துறையினர் முன் வர வேண்டும். அப்போது தான் விபத்து குறையும் என பொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

பிளாட்பாரம் கடைகளை அகற்றாமல் போலீசார் மாநகராட்சியினர் வேடிக்கை பார்ப்பதாக புகார் எழுந்துள்ளது. டவுன்ஹால் காந்திபுரம் உக்கடம் உள்ளிட்ட பகுதிகளில் பிளாட்பார கடைகளில் மாமூல் வசூல் தீவிரமாக இருப்பதாகவும் புகார் எழுந்துள்ளது.

நெடுஞ்சாலைத்துறையினர் கூறுகையில், “பிரதான ரோடுகளில் நிலவும் விபத்து அபாய சூழல் தொடர்வாக விரைவில் ஆய்வு கூட்டம் நடத்தப்படவுள்ளது. இதில் தீர்வு காணும் வகையிலான முடிவுகள் எடுக்கப்படும். ” என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *