கோவையில் பைக் திருடர்கள் 6 பேர் கைது..! சைடு லாக் உடைத்து கைவரிசை
கோவை நீலிக்கோணம்பாளையம் பகுதியில் இருசக்கர வாகனம் திருட்டு போனது சம்பந்தமாக சிங்காநல்லூர் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. திருட்டு போன வாகனத்தை கண்டுபிடிக்க தனிப்படை அமைத்து போலீசார் தேடி வந்தனர்.
இதில் தூத்துக்குடி சாத்தான் குளத்தை பூர்வீகமாக கொண்ட வெள்ளக்கிணறு பாரதி நகரில் வசிக்கும் தங்க இசக்கி (21), இசக்கி முத்து (22), திருச்சி அரிய மங்கலத்தை சேர்ந்த தீபக் (20), சின்ன வேடம்பட்டியை சேர்ந்த மனோஜ் (23) ஆகியோர் ஈடுபட்டது கண்காணிப்பு கேமரா பதிவுகளில் கண்டறியப்பட்டது.
4 பேரையும் கைது செய்தனர். இவர்கள் பல இடங்களில் வாகனங்களை திருடி விற்பனை செய்திருப்பதாக தெரியவந்தது, ஆலாந்துறை, அன்னூர் புளியம்பட்டி, பெரியநாயக்கன்பாளையம் மற்றும் கோவை போத்தனூர், சிங்காநல்லூர் பகுதிகளில் வீடுகளின் முன்பாகவும், பார்க்கிங் பகுதியிலும் நிறுத்தி வைக்கப்பட்ட இருசக்கர வாகனங்களை திருடி சென்று விற்பனை செய்ய வைத்திருந்த 8 பைக்குகளை பறிமுதல் செய்தனர்.
இவர்கள் மீது ஏற்கனவே பல இடங்களில் திருட்டு வழக்கு இருக்கிறது. இதில் மேலும் இந்த வழக்கில் 2 பேரை போலீசார் கூடுதலாக கைது செய்தனர்.
வயதானவர்கள் போலீசில் அளித்த வாக்குமூலத்தில் வீடுகளில் முன்பு மற்றும் ரோட்டோரங்களின் நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை சைடு லாக் உடைத்து மாற்று சாவி போட்டு திருடி விடுவோம். திருடிய வாகனங்களை ஆர்சி புக் இல்லாவிட்டாலும் கிடைத்த விலைக்கு விற்பனை செய்து விடுவோம். அந்த பணத்தில் ஜாலியாக பல்வேறு இடங்களுக்கு சென்று ஊர் சுற்றி மது குடித்து அனுபவித்து வந்தோம். சில இடங்களில் கேடிஎம் பைக் திருடி இருக்கிறோம். பைக் திருடினால் அதனை ஒரு வாரத்துக்குள் விற்பனை செய்து விடுவோம் என்றனர்.
