கோவையில் மகளிர் உரிமை தொகை கேட்டு கதறி அழுத பெண்கள்..!
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் முகாம் இன்று நடந்தது. இதில் கோவை எஸ்ஐஎச்எஸ் காலனி மகாத்மா ரோடு பகுதியில் எப்எல்2 உரிமம் பெற்ற பார் திறக்க ஏற்பாடு செய்வது தொடர்பாக பொதுமக்கள் அளித்த புகார் மனுவில், ” எங்கள் பகுதியில் எப் எல் 2 உரிமம் பெற்ற தனியார் பார் அமைக்க ஏற்பாடு செய்து வருகிறார்கள்.
கட்டுமான பணிகள் நிறைவடைந்து திறக்க போகிறார்கள். ஏற்கனவே இந்த பகுதியில் டாஸ்மாக் மதுபான கடை உள்ளது. பள்ளி உள்ள இடத்தில் தனியார் மதுபான கடை அமைத்தால், படிக்கின்ற மாணவ மாணவிகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனவே மதுபான கடை கிறக்க அனுமதிக்க கூடாது.
ஏற்கனவே பல முறை புகார் கூறியும் தனியார் பார் அமைக்க கலால் துறை தடையை மீறி அனுமதி வழங்கியிருக்கிறது. “என தெரிவித்தனர்.
இருகூர் சுல்தான்பேட்டையில் இருந்து 300க்கும் மேற்பட்ட பெண்கள் கலெக்டர் அலுவலகத்தில் குவிந்து புகார் மனு அளித்தனர். அப்போது அவர்கள். “எங்களுக்கு பல ஆண்டாக இலவச மனை பட்டா வழங்குவதாக தெரிவித்தனர்.
ஆனால் பட்டா வழங்கவில்லை. வேறு ஏரியாவில் இடம் இருந்தால் அங்கே பட்டா வழங்குவதாக கூறினார்கள். அதையும் செய்யவில்லை. ஏற்கனவே 10க்கும் மேற்பட்ட முறை மனு அளித்து விட்டோம். தொடர்ந்து மனு வாங்கி கொண்டே இருக்கிறார்கள் .
விரைவில் மனை பட்டா தருவோம் என சொல்லி கொண்டே இருக்கிறார்கள் தாழ்த்தப்பட்ட பழங்குடியின மக்களாக இருந்தும் தொடர்ந்து அலைய வைக்கிறார்கள் என்றனர்.
கோவை மாவட்டத்தின் பல்வேறு பகுதியில் இருந்து 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மகளிர் உரிமை. தொகை கேட்டு கலெக்டர் அலுவலகம் வந்திருந்தனர். இதனால் குறை தீர்ப்பு கூட்ட வளாகத்தில் இடமில்லாமல் நுழைவு வாயில் வரை பெண்கள் கூட்டம் நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.
இது தொடரபாக பெண்கள் கூறுகையில் “நாங்கள் ஏழ்மை நிலையில் இருக்கிறோம். மகளிர் உரிமை தொகை பெற தகுதி இருந்தும் கடந்த சில ஆண்டாக எங்கள் பெயரை பட்டியலில் சேர்க்கவில்லை.
தொடர்ந்து நாங்கள் மனு அளித்து வருகிறோம் ஆனால் எதாவது காரணம் சொல்லி நிராகரிக்கிறார்கள். தகுதி இல்லாத பலரை மகளிர் உரிமை தொகைக்கான பட்டியலில் சேர்த்து விட்டார்கள். எங்களுக்கு மகளிர் உரிமை தொகை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும், “என்றனர்.
சில பெண்கள் மனு கொடுத்து அடுத்த மாதம் மகளிர் உரிமை தொகை கிடைக்குமா என கேட்டனர். அதற்கு அதிகாரிகள் வாய்ப்பு இல்லை என்ற போது அதை கேட்டு சில பெண்கள் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். அவர்களை அலுவலர்கள் சமாதானம் கூறி அனுப்பி வைத்தது. பரிதாபத்தை ஏற்படுத்தியது.
