கோவையில் மகளிர் குழு பெயரில் மோசடி; போலீசார் வழக்கு
கோவை அரசு மருத்துவமனை அருகே கடந்த 16 வருடங்களாக தனியார் அறக்கட்டளை செயல்பட்டு வருகிறது. இந்த அறக்கட்டளை மூலம் மகளிர் சுய உதவி குழுக்களில் உள்ள பெண்கள் தொழில் தொடங்குவதற்காக கடன் தொகை வழங்கப்படுகிறது. அந்த தொகையை மகளிர் சுய உதவி குழுவினர் மாதந்தோறும் அறக்கட்டளைக்கு திருப்பி செலுத்தி வருகின்றனர்.
அவர்களிடம் பணம் வசூல் செய்ய அறக்கட்டளை நிர்வாகம் ஊழியர்களை நியமனம் செய்துள்ளது. அதேபோல 65 குழுவினரிடம் பணம் வசூல் செய்ய பெரியநாயக்கன்பாளையத்தை சேர்ந்த முனிராஜா என்பவரை அறக்கட்டளை நியமித்தது.
இந்த நிலையில் மகளிர் சுயஉதவி குழுவில் உள்ள பெண்களிடம் பணத்தை வசூல் செய்து வந்த முனிராஜா, அந்த பணத்தை வங்கியில் செலுத்தாமல் இருந்து வந்துள்ளார். இதனால் வங்கியில் இருந்து பணம் செலுத்தவில்லை என அறக்கட்டளைக்கு தகவல் வந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த அறக்கட்டளை நிர்வாகம் வசூல் பணம் குறித்து ஆய்வு செய்தனர். அதில் ரூ. 30 லட்சத்தை முனிராஜா வசூலித்து மோசடி செய்து இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து அறக்கட்டளை உரிமையாளர் வட்சுமி ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளித்தார். போலீசார் முனிராஜா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
