கோவையில் ரேஷன் கடைகளில் மோடி படம்: தடையை மீறி போராடிய 49 பாஜகவினர் கைது..!

தமிழகத்தில் மத்திய அரசின் திட்டங்கள் சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது . மோடி அரசு மூலமாக ரேஷன் கடைகளுக்கு மாதம் இரண்டு லட்சம் டன் ரேஷன் அரிசி மற்றும் கோதுமை வழங்கப்பட்டு வருகிறது.

ஆனால் இந்த விவரங்களை மறைத்து தமிழக அரசு தானே ரேஷன் பொருட்களை வழங்குவது போல் காட்டிக் கொண்டிருக்கிறது. அன்ன யோஜனா திட்டத்தை மத்திய அரசு சிறப்பாக செயல்படுத்தி வருகிறது. எனவே மத்திய அரசின் திட்டங்களை மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் ரேஷன் கடைகளில் பிரதமர் மோடி படம் வைக்க வேண்டும் என பாஜகவினர் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர் .

இந்த நிலையில் கோவை சிவானந்தா காலனியில் ரேஷன் கடைகளில் பிரதமர் படம் வைக்க வேண்டும் எனவும் மத்திய அரசின் திட்டங்களுக்கு தமிழக அரசு ஸ்டிக்கர் ஒட்டக்கூடாது என வலியுறுத்தி இன்று மதியம் போராட்டம் நடத்த திட்டமிட்டனர்.

ஆனால் இதற்கு சாய்பாபா காலனி போலீசார் அனுமதி வழங்கவில்லை. தடை மீறி போராட்டம் நடத்த முயற்சி செய்த பாஜக நிர்வாகிகள் 49 பேர் கைது செய்யப்பட்டனர் .

முன்னதாக பாஜகவினர் கூறுகையில் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் மத்திய அரசின் உதவிகளை தடுக்கும் வகையில் மாநில அரசு செயல்படுகிறது. மத்திய அரசின் திட்டங்களை மாநில அரசு தங்களது ஸ்டிக்கர் ஒட்டி ஒட்டி பயன்படுத்துகிறது. இந்த போக்கை கைவிட வேண்டும் ,”என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *