கோவையில் வாலிபரை மிரட்டி ஜி பே மூலமாக 43 ஆயிரம் பறிப்பு: 4 மாணவர் கைது
விருதுநகரை சேர்ந்தவர் முனிஸ்குமார் (26), இவர், கோவை பீளமேடு ஆவாரம்பாளையம் பகுதியில் வசித்து வந்தார்.
ஐடி நிறுவனத்தில் உதவி மேலாளராக வேலை செய்து வந்தார். கடந்த பிப்ரவரி மாதம் அந்த பணியில் இருந்து முனிஸ்குமார் விலகி வேறு வேலை தேடி வருகிறார். முனிஸ்குமார் சவுரிபாளையம் மற்றும் உடையம்பாளையம் பகுதியில் வேலை தேடி சென்றார்.
அப்போது உடையம்பாளையம் பகுதியில் தங்கியிருந்த தனக்கு தெரிந்த நபர் லோகேஷ் என்பவரது அறைக்கு சென்றார். அங்கு லோகேசின் நண்பர்கள் 3 பேர் இருந்தனர். அவர்களுடன் முனிஸ்குமார் பேசி கொண்டு இருந்தார். அவர்கள், முனிஸ்குமாரிடம் பணம் எவ்வளவு உள்ளது என கேட்டுள்ளனர். அதற்கு முனிஸ்குமார் தன்னிடம் பணம் எதுவும் இல்லை, வேலை இல்லாமல் உள்ளேன் என்றுள்ளார்.
உடனே லோகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் முனிஸ்குமாரின் போனை பறித்து, அவரது வங்கி கணக்கில் உள்ள பணத்தை பார்த்தனர். அதில் ரூ.4,500 மட்டும் இருந்தது. இதனால் அவர்கள் 4 பேரும் சேர்ந்து முனிஸ்குமாரிடம் அவரது நண்பர்களுக்கு போன் செய்து விபத்தில் நண்பர் அடிபட்டு மருத்துவமனையில் இருப்பதாக கூறி பணம் வாங்கும்படி மிரட்டினர்.
பயந்து போன முனிஸ்குமார் தனது நண்பர்கள் 3 பேருக்கு போன் செய்து மருத்துவ உதவிக்கு பணம் வேண்டும் என கேட்டு ஜிபே மூலம் 43,500 ரூபாய் பெற்றார். அந்த பணத்தை லோகேஷ் மற்றும் அவரது நண்பர்கள் போனில் இருந்து தங்களது வங்கி கணக்கிற்கு மாற்றினர்.
முனிஸ்குமாரிடம் இதனை வெளியே கூறினால் கொலை செய்து விடுவதாக மிரட்டி விரட்டி விட்டனர்.
நேற்று பீளமேடு போலீசில் புகார் அளித்தார். அதன்பேரில், போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில் முனிஸ்குமாரிடம், பணம் பறித்தது உடையம்பாளையம் பகுதியில் அறை எடுத்து தங்கி தனியார் கல்லூரியில் 2ம் ஆண்டு படித்து வரும் மாணவர்கள் சென்னையை சேர்ந்த லோகேஷ் (19), மற்றும் அவரது நண்பர்கள் தூத்துக்குடியை சேர்ந்த செல்டன் (19), தென்காசியை சேர்ந்த சிப்ரயலு (19), மயிலாடு துறையை சேர்ந்த அபதுல் காதர் (19) என தெரியவந்தது. அவர்களை போலீசார் கைது செய்தனர்.
