கோவையில் வீடு வீடாக அதிமுக கொடுத்த பரிசு..!
கோவை மாவட்டத்தில் அதிமுக சார்பில் முப்பெரும் தலைவர்கள் பிறந்தநாள் விழா என்ற பெயரில் வீடு வீடாக பரிசு பொருட்கள் வழங்கும் பணி தீவிரமாக நடக்கிறது. கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் ஒரு ஹாட் பாக்ஸ் மற்றும் சில்வர் தட்டு வழங்கப்பட்டது.
சில்வர் தட்டில் புரட்சித்தலைவர் புரட்சித்தலைவி எடப்பாடி யார் பெயர்களை எழுதி வைத்திருந்தனர். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்தநாளில் இருந்து மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் பரிசு பொருட்கள் வழங்கும் பணி நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.
கோவை மாவட்ட அளவில் 27 லட்சம் வாக்காளர்களுக்கு பரிசு பொருட்களை வழங்க திட்டமிட்டு அந்த கட்சியினர் தீவிரமாக செயல்பட்டு வருவதாக தெரியவந்துள்ளது. முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி தொகுதியான தொண்டாமுத்தூரில் ஐந்து முதல் ஏழு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.
வழக்கமாக அதிமுகவினர் அள்ளி அள்ளி கொடுப்பார்கள். தற்போது முதல் கட்டமாக பரிசுப் பொருட்கள் வீடு தேடி வந்திருக்கிறது. இன்னும் சில நாட்களில் கூடுதல் பொருள்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாக தெரிகிறது.
தேர்தல் நெருங்கி வருவதால் பொதுமக்கள் இலவச பரிசு பொருட்களை தாராளமாக எதிர்பார்க்கலாம் என கட்சியினர் வெளிப்படையாகவே தெரிவித்தனர். அதிமுக வாரி வழங்கும் அதே நேரத்தில் திமுகவினர் இதுவரை எந்த ஒரு பரிசு பொருட்களையும் வழங்கவில்லை.
திமுக தரப்பில் ஏற்கனவே பொங்கல் பரிசு 3000 ரூபாய் மற்றும் மகளிர்க்கு ஐந்தாயிரம் ரூபாய் மாற்றுத்திறனாளிகளுக்கு 2000 ரூபாய் வழங்கப்பட்டிருந்தது. இது மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு அலையை ஏற்படுத்தியிருக்கிறது. இதை அதிமுக சமாளித்து தேர்தலை எதிர்கொள்வது சவால் ஆனது நடுநிலையாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
