கோவையில் வெளிநாட்டு பணம் என நூதன ஆசை காட்டி ரூ 2.50 கோடி மோசடி; 3 பேர் கைது
காஞ்சீபுரம் கோவூர் பகுதியை சேர்ந்தவர் ரவி ( 56). ரியல் எஸ்டேட் அதிபர். இவர் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் மனு ஒன்று அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டு உள்ளதாவது:- கோவை பட்டணம் பகுதியை சேர்ந்த முத்து, அவரது மகன் தீபக் (27) ஆகியோருடன் கடந்த 2019-ம் ஆண்டு முதல் அறிமுகம் ஏற்பட்டு பழகி வந்தோம். இந்த நிலையில் முத்து கடந்த 2022-ம் ஆண்டு இறந்து விட்டார்.
இதனிடையே தீபக் என்னை அணுகினார். தனது அப்பாவிற்கு ரூ.300 கோடி பணம் வெளிநாட்டில் இருந்து வந்துள்ளதாகவும், அந்த பணம் ரிசர்வ் வங்கியில் உள்ளதாகவும் என்னிடம் தெரிவித்தார். மேலும் அந்த பணத்தை எடுக்க வேண்டும் என்றால் வரி செலுத்த வேண்டும் என்றும், அதற்கு உதவி செய்தால் ரூ.300 கோடியில் 30 சதவீதம் தொகையை கமிஷனாக கொடுப்பதாக என்னிடம் தெரிவித்தார்.
மேற்கண்ட பணம் ரூ.300 கோடி உள்ளதற்கு ஆதாரமாக போலியாக தயாரிக்கப்பட்ட கடித ஆவணங்கள் மற்றும் புகைப்படங்களை என்னிடம் காண்பித்தார். இதனை நம்பிய நான் அவருக்கு பல்வேறு கட்டங்களாக ரூ.2½ கோடி பணம் கொடுத்தேன். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்ட அவர் கூறியப்படி கமிஷன் தொகையை திருப்பி தரவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த நான் எனது பணத்தை மட்டுமாவது திருப்பி தரும்படி கேட்டேன்.
ஆனால் தீபக், அவரது தாயார் ஷாலினி, சகோதரி ரேஷ்மா, உறவினர் ராஜா ஆகியோர் எனது பணத்தை திருப்பி தராமல் ஏமாற்றியதுடன், என்னை கொலை செய்வதாக மிரட்டல் விடுத்தனர். எனவே இதுகுறித்து உரிய நடவடிக்கை எடுத்து எனது பணம் ரூ.2½ கோடியை திரும்ப பெற்றுத்தர வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டது.
புகாரின் பேரில் கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் செல்வம் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஒரே குடும்பத்தை சேர்ந்த தீபக், ஷாலினி, ரேஷ்மா ஆகிய 3 பேரையும் கைது செய்தனர்.
