கோவையில் 34 லட்சம் பேருக்கு ரேஷன் அரிசி…!

கோவை மாவட்டத்தில் 1401 ரேஷன் கடைகள் செயல்படுகிறது. மாவட்ட அளவில், 11,58,798 ரேஷன் கார்டுகள் பயன்பாட்டில் இருக்கிறது. நடப்பாண்டில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கூடுதலாக ரேஷன் கார்டு வழங்கப்பட்டுள்ளது.

புதிய ரேஷன்கார்டுகள் தடையின்றி வழங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. வழங்கல் துறையினர் சார்பில் புதிய ரேஷன்கார்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. மாவட்ட அளவில் ரேஷன் பொருட்கள் பயனாளிகளாக 34,25,505 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இவர்களில் 34,06,543 பேரின் ஆதார் பதிவுகள் பெறப்பட்டிருக்கிறது. ரேஷன் பொருட்கள் வாங்குவோர் எண்ணிக்கை மாதந்தோறும் அதிகமாகி வருகிறது. அதிலும் வெளி மாநில தொழிலாளர்கள் வருகை அதிகமாகி விட்டதால், ரேஷன் பொருட்கள் வழக்கத்தை விட கூடுதலாக தேவைப்படுகிறது. அதிக நபர்கள் ரேஷன் பொருட்கள் கேட்டாலும் தட்டுபாடின்றி தாராளமாக வழங்கப்படுகிறது.

ரேஷன் அரிசி பற்றாக்குறை இதுவரை ஏற்பட்டதில்லை. எப்போதும் ரேஷன் அரிசி இருப்பு இருந்து கொண்டே இருக்கிறது. கடைகளில் ரேஷன் அரிசி இல்லை என பொதுமக்கள் திரும்பி சென்றதாக எந்த கடையிலும் இதுவரை புகார் பெறப்படவில்லை. கடந்த காலங்களில் எல்கார்ட் மூலமாக ரேஷன் கார்டுகள் அச்சிடப்பட்டு வழங்கப்பட்டது.

தற்போது வழங்கல் பிரிவில் இதற்காக பிரிண்டர் வைக்கப்பட்டு புதிய கார்டுகள் தயாரிக்கப்பட்டு வழங்கப்படுகிறது.

வழங்கல் பிரிவினர் கூறுகையில், “ரேஷன்கார்டுகள் வழங்கும் பணியை வேகப்படுத்தி வருகிறோம். வெளி மாநிலம், வெளி மாவட்டத்தில் வசிப்பவர்கள் கோவையில் புதிய ரேஷன்கார்டு கேட்டு விண்ணப்பித்து வருகிறார்கள். வடமாநில தொழிலாளர்கள் வேலைக்காக கோவை வந்து விட்டால் அவர்கள் ஐஎம்பிடிஎஸ் முறையில் ரேஷன் பொருட்கள் பெற முடியும். ரேஷன்கார்டுகள், ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ளது.

ரேஷன்கார்டு இல்லாவிட்டால் கூட ஆதார் கார்டை பயன்படுத்தியும் ரேஷன் பொருட்களை பெற முடியும். கோவை மாவட்டத்தில் வெளி மாநிலத்தினருக்கு ரேஷன் பொருட்கள் வழங்குவதில் எந்த தடையும் இல்லை. இதற்காக அனைத்து விதமான நடவடிக்கையும் எடுக்கப்பட்டுள்ளது. மாவட்ட அளவில், புதிய ரேஷன் கார்டு விண்ணப்பங்கள், சரிபார்ப்பு, பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம் போன்ற பணிகள் ஆன்லைனில் நடக்கிறது.”என்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *