கோவையில் 44 மாணவர்களுக்கு வாந்தி மயக்கம்.. பல்லி உணவு குறித்து விசாரணை..!

கோவை கவுண்டம்பாளையம் ஹவுசிங் யூனிட் பகுதியில் மாநகராட்சி நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு இன்று மதிய உணவு வழங்கப்பட்து.

அப்போது, உணவில் பல்லி கிடப்பதாக தெரியவந்தது. இந்த உணவை சாப்பிட்ட 31 மாணவர்கள், 13 மாணவிகள் என 44 பேருக்கு வாந்தி மயக்கம் ஏற்பட்டது.

உடனடியாக மாணவர்களை ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கே மாணவர்களுக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதையடுத்து, மாணவர்கள் அனைவரும் உடல் நலமுடன் இருப்பதாகவும் குணமாகியவுடன் அவர்கள் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்கள் என கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் தெரிவித்தார்.

இந்நிலையில் பாதிக்கப்பட்ட

மாணவ மாணவியரின் பெற்றோர்கள் பள்ளியில் குவிந்தனர் அவர்கள் சத்துணவு சரியில்லை எனக் கூறி கடும் வாக்குவாதம் செய்தனர். சில நாட்களுக்கு முன்பு பள்ளி சத்துணவில் கரப்பான் பூச்சிகள் கிடந்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது. இதை பள்ளி நிர்வாகம் கண்டுகொள்ளவில்லை என புகார் தெரிவித்தனர்.

பாதிக்கப்பட்ட மாணவர்களை மாநகராட்சி மேயர் ரங்கநாயகி மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் ஆகியோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர் மாணவ, மாணவியர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் மருத்துவர்களிடம் கேட்டறிந்தனர்.

இது குறித்து மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் நிருபர்களிடம் கூறுகையில், “கவுண்டம்பாளையம் நடுநிலைப்பள்ளியில் பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட மாணவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். அங்கு உடனே ஆம்புலன்ஸ் அனுப்பப்பட்டு மருத்துவ குழுவினர் மூலமாக மாணவர்கள் கோவை அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். மாணவ மாணவிகளுக்கு சிகிச்சை அளித்து வரும் நிலையில் அவர்களின் உடல் நிலை சீராக உள்ளது. 20 நர்சுகள் மற்றும் டாக்டர்கள் கண்காணித்து வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *