கோவையில் 9454 மாநகராட்சி தொழிலாளர்களுக்கு காலை உணவு..!
கோவை மாநகராட்சியில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி மூலம் இன்று காலை தொடங்கி வைத்தார். இந்த விழா கோவை காளப்பட்டி ரோட்டில் உள்ள சுகுணா ஆடிட்டோரியத்தில் நடைபெற்றது. இதில், கோவை மாநகராட்சியில் பணிபுரியும் ஆயிரக்கணக்கான தூய்மை பணியாளர்கள் கலந்து கொண்டனர். அவர்களுக்கு காலை உணவாக இட்லி, வடை, பொங்கல் மைசூர்பா வழங்கப்பட்டது.
இத்திட்டத்தின் மூலம் கோவை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் 100 வார்டுகளில் பணிபுரியும் நிரந்தர தூய்மைப் பணியாளர்கள், ஒப்பந்த தூய்மைப் பணியாளர்கள், ஓட்டுநர்கள் கொசு ஒழிப்பு பணியாளர்கள், மழைநீர் வடிகால் சுத்தம் செய்யும் பணியாளர்கள், பள்ளிகள் மற்றும் வார்டுகளில் கழிவறை பராமரிக்கும் பணியாளர்கள் உட்பட மொத்தம் 9.454 பணியாளர்கள் பயன்பெறுவார்கள் என மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதே போல் கோவை மாவட்டத்தில் அந்தந்த பேரூராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளிலும் இந்த திட்டம் துவங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது விழாவில், கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார் மாநகராட்சி கமிஷனர் சிவகுரு பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
