கோவை அப்பார்ட்மெண்டில் கை கால் கட்டி போட்டு மூதாட்டி கொலை..!
கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள ஒரு பிரபல அப்பார்ட்மெண்டில் இன்று காலை மூதாட்டி ஒருவரின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது .
இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது அந்த வீட்டில் ஆயுர்வேத டாக்டர் ராம்குமார் குட்டி என்பவரின் தாய் கஸ்தூரி (80) கை கால் கயிறால் கட்டி போட்ட நிலையில் இறந்து கிடந்தார் .
அவரது கழுத்து பகுதியில் காயம் இருந்தது . வாயில் துணி வைத்து அடைத்து இருந்தனர்.இது தொடர்பாக போலீசார் விசாரித்த போது அந்த வீட்டில் நேபாள நாட்டை சேர்ந்த வேலைக்கார பெண் சுர்ஜா போர்கி (37) என்பவர் துணையாக இருந்துள்ளது தெரியவந்தது. கஸ்தூரி இறந்த பின்னர் அந்த வேலைக்கார பெண்ணை காணவில்லை. அவர் தனக்கு தெரிந்த ஆட்கள் மூலமாக கஸ்தூரியை கொலை செய்து நகை பணத்தை திருடி தப்பி சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. அந்த பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வருகிறார்கள்.
நேற்று ராம்குமார் குட்டி தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வெளியூர் சென்று விட்டார். இன்று காலை அவர் தனது தாயின் செல்போனில் தொடர்பு கொண்டு பேச முயற்சி செய்தார். ஆனால் போன் எடுக்க வில்லை. இதனால் சந்தேகம் அடைந்த அவர் பக்கத்து வீட்டு நபரை தொடர்பு கொண்டு தனது தாய் இருக்கிறாரா என பார்த்து தெரிவிக்குமாறு கூறியுள்ளார்.
பக்கத்து வீட்டு நபர் சென்று பார்த்த போது கஸ்தூரி கை கால் கட்டி போட்ட நிலையில் கொலை செய்யப்பட்டது தெரியவந்துள்ளது. கொள்ளை போன நகை பணம் தொடர்பான தகவல்களை போலீசார் சேகரித்து வருகின்றனர். இறந்த மூதாட்டி கஸ்தூரி பாரம்பரியமிக்க ஆயுர்வேத மையத்தின் முக்கிய நிர்வாகியாக இருந்துள்ளார்.
ஏற்கனவே இதே அபார்ட்மெண்டில் நகை பணத்திற்காக பல்வேறு குற்ற செயல்கள் நடந்துள்ளது. தற்போது அதே பாணியில் கொள்ளையுடன் கொலையும் நடந்திருப்பது அந்த குடியிருப்பு பகுதி மக்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. குற்றவாளிகளை விரைவில் போலீசார் பிடிக்க வேண்டும் என பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
