கோவை அப்பார்ட்மெண்ட் மூதாட்டி கொலையில் 2 பேர் கைது
கோவை ராமநாதபுரம் நஞ்சுண்டாபுரம் பகுதியில் உள்ள ஒரு பிரபல அப்பார்ட்மெண்டில் மூதாட்டி ஒருவரின் சடலம் கிடப்பதாக தகவல் கிடைத்தது .
இது தொடர்பாக ராமநாதபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று விசாரித்தனர். அப்போது அந்த வீட்டில் ஆயுர்வேத டாக்டர் ராம்குமார் குட்டி என்பவரின் தாய் கஸ்தூரி (80) கை கால் கயிறால் கட்டி போட்ட நிலையில் இறந்து கிடந்தார் .
அவரது கழுத்து பகுதியில் காயம் இருந்தது . வாயில் துணி வைத்து அடைத்து இருந்தனர்.இது தொடர்பாக போலீசார் விசாரித்த போது அந்த வீட்டில் நேபாள நாட்டை சேர்ந்த வேலைக்கார பெண் சுர்ஜா போர்கி (37) என்பவர் துணையாக இருந்துள்ளது தெரியவந்தது.
கஸ்தூரி இறந்த பின்னர் அந்த வேலைக்கார பெண்ணை காணவில்லை. அவர் தனக்கு தெரிந்த ஆட்கள் மூலமாக கஸ்தூரியை கொலை செய்து நகை பணத்தை திருடி தப்பி சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது.
அந்த பெண்ணை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கில் தொடர்புடைய நேபாள மாநிலத்தை சேர்ந்த ராகேஷ் சவுத்( 25) திலீப் சாஹி( 22) ஆகியோரை போலீசார் இன்று கைது செய்தனர்.
இவர்கள் பெங்களூரு திப்ப சந்திரா பகுதியில் பகுதி இருந்தபோது போலீசார் சுற்றி வைத்து கைது செய்தனர்.
இவர்களிடமிருந்து 57 ஆயிரம் ரூபாய்,7.5 பவுன் தங்க நகை, வெள்ளி பொருட்கள் மற்றும் இந்திய வெளிநாட்டு நாணயங்கள் பறிமுதல் செய்யப்பட்டது . இந்த வழக்கில் தொடர்புடைய சுர்ஜா உள்பட மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். இந்தக் கொலையில் சுர்ஜா மாஸ்டர் பிளான் போட்டு கொடுத்து மூதாட்டி தனியாக இருக்கும் தகவலை தெரிவித்து தனது கணவர் மற்றும் கூட்டாளிகளை வரவழைத்து கொலை செய்திருப்பதாக தெரியவந்தது. கைது செய்யப்பட்ட இரண்டு பேர் மீது மேலும் பல்வேறு பகுதிகளில் வழக்கு இருப்பதாகவும் தெரியவந்துள்ளது.
