கோவை அரசு மருத்துவமனை முன் சாலை மறியல், போக்குவரத்து பாதிப்பு..!
திருப்பூர் வஞ்சிபாளையம் இடுவம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் மனோஜ் குமார் (27 ). கிரேன் தொழிலாளி . இவர் கோவை அரசு மருத்துவமனையின் முன்பு இன்று மாலை தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டார் .
அப்போது அவர் கூறுகையில்,” எனது தம்பி கதிரேசன் (25 ) தொழிலாளியாக வேலை செய்து வந்தார். நேற்று எங்களது வீட்டுக்கு தேவையான மளிகை சாமான் வாங்க அவர் இருசக்கர வாகனத்தில் சென்றபோது திருப்பூர் 63 வேலம்பாளையம் ரோட்டில் அந்த வழியாக சென்ற அரசு பஸ் மோதி இறந்துவிட்டார். அந்த பஸ் டிரைவர் கவனக்குறைவாக வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியதாக தெரிகிறது.
மேலும் அந்த பகுதி பொதுமக்கள் ஏன் இப்படி செய்தீர்கள் எனக் கேட்டபோது அவர்களுடன் வாக்குவாதம் செய்து தகாத முறையில் அவர் பேசியுள்ளார். விபத்து ஏற்படுத்திய அந்த பஸ் டிரைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது தம்பியை மீட்க வந்த ஆம்புலன்ஸ் சேவை குறைபாடு காரணமாக பாதி வழியில் நிறுத்தப்பட்டது. இந்த பிரச்சனைக்கு தீர்வு காண வலியுறுத்தி நாங்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்,” என்றார். இந்த மறியல் போராட்டம் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
