கோவை அவிநாசி ரோடு ஜிடி நாயுடு மேம்பாலத்தில் நாளை முதல் ஏ ஐ கேமரா..!

கோவை அவிநாசி ரோடு ஜிடி நாயுடு மேம்பாலம் கடந்த ஆண்டு திறக்கப்பட்டது. 1671 கோடி ரூபாய் செலவில் 10.1 கிலோ மீட்டர் தூரம் நான்கு வழி பாதையாக 17.25 மீட்டர் அகலத்தில் இந்த மேம்பாலம் அமைக்கப்பட்டுள்ளது.

தென்னிந்தியாவின் இரண்டாவது நீண்ட மேம்பாலம் என்ற பெருமை இதற்கு உண்டு.
இந்த மேம்பாலத்தில் வேகக் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இதை கண்காணிக்க கேமரா அமைக்கப்படவில்லை .

மேம்பாலத்தில் செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்தில் பாதிக்கப்படும் நிலைமை இருக்கிறது. மேலும் சிலர் வாகனங்களில் வீலிங் பயர் டிரைவிங் போன்ற சாகசத்தில் ஈடுபடுவதாக புகார் எழுந்துள்ளது. அதி வேகமாக வாகனங்கள் செல்வதும் போக்குவரத்து விதிமுறை மீறல் நடப்பதும் அடிக்கடி அதிகமாகி விட்டது.

இதை தடுக்கும் வகையில் மாநில நெடுஞ்சாலைத்துறை திட்டங்கள் பிரிவு சார்பில் கண்காணிப்பு கண்காணிப்பு கேமரா அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது . 3 கோடி ரூபாய் செலவில் இந்த கேமரா அமைக்கும் பணி நாளை முதல் துவக்கப்பட உள்ளது. மேம்பாலம் சந்திப்பு பகுதிகளான கோல்டு வின்ஸ் மற்றும் உப்பிலிபாளையம் பகுதியில் கண்காணிப்பு கேமரா அமைக்கப்படும்.

இது தவிர அண்ணா சிலை, நவ இந்தியா ,பி எஸ் ஜி தொழில்நுட்ப கல்லூரி, ஹோப் காலேஜ் , கொடிசியா என எட்டு இடங்களில் உள்ள ஏறு இறங்கு தளங்கள் அபாய வளைவுகள் உள்ளிட்ட பகுதிகளில் மொத்தம் 44 கண்காணிப்பு கேமரா அமைக்கப்பட உள்ளது .

இது தொடர்பாக மாநில நெடுஞ்சாலை துறை திட்டங்கள் பிரிவு கோட்ட பொறியாளர் சமுத்திரக்கனி கூறுகையில்,”

கண்காணிப்பு கேமரா உயரமான கம்பங்களின் மீது பொருத்தப்படும். இதில் வாகனங்களின் எண் உள்ளே அமர்ந்திருப்பவர்கள் சீட் பெல்ட் அணிந்திருக்கிறார்களா இல்லையா, அதிக வேகத்தில் வாகனங்கள் செல்கிறதா கூடுதல் முகப்பு விளக்குகள் பொருத்தப்பட்டு இருக்கிறதா, அதிக எடையில் வாகனங்களில் லோடு ஏற்றப்பட்டு இருக்கிறதா போன்ற அனைத்து விதமான போக்குவரத்து விதிகளையும் இதில் கண்டறிய முடியும்.

வாகனங்கள் அதிக வேகத்தில் சென்றால் உடனடியாக அந்த வாகனங்களின் வேகம் கேமரா டிஸ்ப்ளே பகுதியில் வாகன ஓட்டிகள் காணும் வகையில் தெரிவிக்கப்படும். மேலும் உடனடியாக அபராத தொகை விதிக்கப்படும் .

வட்டார போக்குவரத்து அலுவலகம், போக்குவரத்து போலீஸ் மற்றும் நெடுஞ்சாலை துறையுடன் இந்த கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகள் இணைக்கப்படும். எந்த வாகனமும் போக்குவரத்து விதிமுறை மீறலில் இருந்து தப்பிக்க முடியாது. மேம்பாலத்தில் அதிகபட்சமாக 60 கிலோ மீட்டர் வேகத்தில் மட்டுமே செல்ல வேண்டும். இதை மீறி செல்லும் வாகனங்களுக்கு அபராதம் விதிக்கப்படும்.

வாகன ஓட்டிகள் போக்குவரத்து விதிகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். கேமரா பொருத்தும் பணி சில நாட்களில் நிறைவடையும். அதற்குப் பிறகு அபராத நடவடிக்கை மேற்கொள்ளப்படும். தமிழகத்தில் வேறு எந்த மேம்பாலங்களிலும் இதுபோன்ற ஏ ஐ கண்காணிப்பு கேமரா அமைக்கப்படவில்லை. முதல் முறையாக கோவையில் அமைக்கப்பட உள்ளது ,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *