கோவை உக்கடம் பஸ் ஸ்டாண்டில் மாயமான 2 சிறுமிகள் மீட்பு

கோவை, உக்கடம் பஸ் நிலையத்தில் இன்று அதிகாலை 3 மணிக்கு 2 சிறுமிகள் நீண்ட நேரம் நின்று கொண்டு இருந்தனர். அப்போது, கோவை மாநகரில் ரோந்து சென்று பெண்களை கண்காணிக்கும் பிங்க் பெட்ரோல் வாகனத்தில் போலீசார் அங்கு சென்றனர்.

அவர்கள் 2 சிறுமிகளையும் அழைத்து விசாரித்தனர்.

அப்போது, அவர்கள் கேரளா மாநிலம் வாளையார் அருகே உள்ள கஞ்சிக்கோடு பனங்காடு பகுதியில் இருந்து வந்திருப்பதாக தெரிவித்தனர். மேலும், விசாரணையில் அவர்கள் 17, 14 வயதுடைய அக்கா, தங்கை என்பதும், அங்குள்ள பள்ளியில் படித்து வருவதும், பெற்றோர் திட்டியதால் இரவில் வீட்டில் கோபித்துக் கொண்டு பஸ்சில் கோவை உக்கடத்திற்கு வந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் மக்கள் நடமாட்டம் அதிகம் இல்லாத நேரத்தில் தவித்த சிறுமிகள் இருவரையும் மீட்டு அவர்களுக்கு அறிவுரை வழங்கினர்.

பின்னர், அவர்களது பெற்றோரின் செல்போன் எண்ணை வாங்கி அவர்களுக்கு தொடர்பு கொண்டனர்.

ஆனால் அவர்களது செல்போன் எண் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனால் போலீசார் வாளையார் போலீஸ் ஸ்டேஷனுக்கு தொடர்பு கொண்டு சிறுமிகளின் விவரங்களை தெரிவித்தனர்.

உடனடியாக வாளையார் போலீசார் பனங்காட்டில் சிறுமியின் வீட்டிற்கு சென்று அவர்களது பெற்றோரிடம் தகவலை கூறினர். அதன் பின்னரே சிறுமிகள் மாயமானது, அவர்களது பெற்றோருக்கு தெரியவந்தது. இதை தொடர்ந்து சிறுமியின் பெற்றோர் அங்கிருந்து கார் மூலம் கோவை விரைந்து வந்தனர்.

அவர்களிடம் போலீசார் அறிவுரை கூறி சிறுமிகளை பத்திரமாக ஒப்படைத்தனர். அவர்கள் போலீசாருக்கு நன்றி தெரிவித்து இனி இவ்வாறு நடக்காமல் பார்த்து கொள்வதாக கூறி புறப்பட்டு சென்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *