கோவை கலெக்டர் ஆபீஸ் முன் மறியல் 130 பேர் கைது

கோவை கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்ப்பு நாள் கூட்டம் இன்று நடந்தது. இதில் சிஐடியு சார்பில் உள்ளாட்சி அமைப்புகளில் பணியாற்றும் ஒப்பந்த தூய்மை பணியாளர்கள் சுய உதவி குழு மற்றும் தூய்மை காவலர்களை பணி நிரந்தரம் செய்தல் குறைந்தபட்ச ஊதியம் வழங்குதல் சம வேலைக்கு
சம ஊதியம் போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தம் மற்றும் சாலை மறியல் போராட்டம் கலெக்டர் அலுவலகம் முன்பு இன்று நடந்தது.
இதில் மறியலில் ஈடுபட்ட 130 ஊழியர்களை ரேஸ்கோர்ஸ் போலீசார் கைது செய்தனர்.
மக்கள் நீதி மய்யம் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் வழங்கப்பட்ட மனுவில் ஆவாரம்பாளையம் ரோடு
ராமகிருஷ்ணா மருத்துவமனை அருகே உள்ள ஆத்துப்பாலத்தில் சுற்றுச்சுவர் உடைந்து காணப்படுகிறது. இந்த வழியாக செல்லும் வாகனங்கள் விபத்தில் பாதிக்கப்படும் நிலைமை இருக்கிறது .
எனவே இந்த பாலத்தின் சுவரை சீரமைக்க வேண்டும் என தெரிவித்தனர்.
மக்கள் அரசு கட்சி சார்பில் கலெக்டர் அலுவலகம் முன்பு இலவச மனை பட்டா கேட்டு போராட்டம் இன்று நடந்தது. இதில் கோவை மாவட்டத்தில் ஏழை மக்களுக்கு இலவச மனை பட்டா வழங்க வேண்டும். வாடகை வீட்டில் வசிப்பவருக்கு வாடகை வழங்க மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இந்த போராட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. இதில் ஏராளமான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கலெக்டர் அலுவலகத்தில் இன்று இமெயில் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் வந்தது. 13வது முறையாக வந்த இந்த மிரட்டலை தொடர்ந்து மாநகர போலீசார் மற்றும் வெடிகுண்டு கண்டறியும் குழுவினர் கலெக்டர் அலுவலகத்தில் சோதனை நடத்தினர். இதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்பதை தெரியவந்தது.
