கோவை கலெக்டர் ஆபீஸ் 150 ஆண்டு பிரிட்டிஷ் கட்டிடம் விரைவில் இடிப்பு..!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பழைய அலுவலகம் 3 தளங்களுடன் செயல்படுகிறது. 5 ஆண்டிற்கு முன் கட்டப்பட்ட புதிய அலுவலகம் 3 தளங்களுடன் அருகே செயல்படுகிறது. இந்த இரு அலுவலகங்களிலும் வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சி முகமை, உணவு வழங்கல் பிரிவு ஆதிதிராவிடர் நலத்துறை, சர்வே, கனிம வளம், பிற்பட்டோர் நலத்துறை, வேளாண்மை. சமூக நலத்துறை, இ சேவை மையம், ஆதார் மையம், நிலம் எடுப்பு, வாழ்ந்து காட்டுவோம் திட்டம், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு மையம், சத்துணவு பிரிவு உள்ளிட்ட பிரிவுகள் செயல்படுகிறது.

மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பல்வேறு துறைகளின் ஆய்வு கூட்டம் நடத்தினால் அதிகாரிகள் அங்கே வர தாமதம் ஏற்படுகிறது கலெக்டர் அலுவலகத்தின் அருகே தெற்கு ஆர்டீஓ அலுவலகம் இருக்கிறது. வடக்கு ஆர்டீஒ அலுவலகம் இருக்கிறது. 3 கிமீ தூரத்திற்குள் நெடுஞ்சாலைத்துறை அலுவலகம், பொதுப்பணித்துறை அலுவலகம் அமைந்துள்ளது. உள்ளூர் திட்ட குழும அலுவலகம் 10 கி.மீ தூரத்திலும், மாசு கட்டுபாட்டு வாரியம் 5 கி.மீ தூரத்திலும், இதர பல்வேறு துறை அலுவலகங்கள் 5 முதல் 9 கி.மீ தூரத்திலும் அமைந்திருக்கிறது.

கலெக்டர் அலுவலகம் தொடர்பான முக்கிய அரசு துறைகளை ஒரே வளாகத்தில் கொண்டு வரும் நோக்கத்தில் ஒருங்கிணைந்த கட்டடம் அமைக்க திட்டமிடப்பட்டிருக்கிறது. இதற்கான கருத்துரு தயாரித்து அரசுக்கு அனுப்பி கூடுதல் கட்டடம் உருவாக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. கலெக்டர் அலுவலகத்தின் பழைய கட்டடங்கள் இடிக்கப்பட்ட பகுதி மற்றும் காலியாக உள்ள மற்றொரு பகுதியில் கூடுதல் கட்டடங்கள் அமைக்கப்படும்.

ஒருங்கிணைந்த கட்டடமாக அமைக்க திட்டமிடப்பட்டு கருத்துரு அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 8 தளங்களுடன் கூடிய இணைப்பு கட்டடம் கட்டலாம், இதற்கு சுமார் 80 கோடி ரூபாய் செலவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கலெக்டர் அலுவலகத்தின் ஒரு பகுதியில் சுமார் 150 ஆண்டு கடந்த மாவட்ட கருவூலக அலுவலகம் இருக்கிறது. பிரிட்டீஷ் ஆட்சி காலத்தில் கட்டப்பட்ட இந்த கட்டடத்தில் தான் இன்னும் ஸ்ட்ராங்க் ரூம் என்ற காப்பு அறை இருக்கிறது.

கருவூல கட்டடத்தில் மழை காலங்களில் நீர் கசிகிறது. ஓடுகள், சுவர்கள் பழுதான போதிலும் பாரம்பரிய கட்டுமானம் என்ற காரணத்திற்காக இந்த கட்டடம் இடிக்க அனுமதிக்கப்படவில்லை, கலெக்டர் அலுவலகத்தின் புதிய கட்டடம் கட்ட முயன்ற போது கருவூல கட்டடம் இடிக்க முயற்சிக்கப்பட்டது. ஆனால் அதிகாரிகள் இதற்கு ஒப்புதல் தரவில்லை. இந்த நிலையில் கருவூலத்தை புதுப்பித்து ஹெரிடேஜ் பில்டிங் ஆக மாற்றலாமா என ஆலோசிக்கப்பட்டது. ஆனால் இந்த பாரம்பரிய கட்டடத் திட்டம் பின்னர் கைவிடப்பட்டது. பிரிட்டிஷ் கால ஆட்சியின் ஆதாரமான இந்த கட்டிடம் விரைவில் இடிக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *