கோவை கல்லூரி மாணவி பாலியல் பலாத்கார வழக்கில் சாட்சி விசாரணை நிறைவு
கோவை விமான நிலையம் அருகே உள்ள காட்டு பகுதியில் கடந்த ஆண்டு நவம்பர் 2ம் தேதி, கல்லூரி மாணவி ஒருவர் ஆண் நண்பருடன் காரில் உட்கார்ந்து பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த 3 பேர் அரிவாளை காட்டி மிரட்டியதுடன், ஆண் நண்பரை தாக்கி அவரை விரட்டி விட்டனர்.
மேலும் அந்த மாணவியை அங்கிருந்து கடத்தி சென்று ஆள் நடமாட்டம் இல்லாத காட்டுப் பகுதியில் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டனர். மூன்று பேர் சேர்ந்து இந்த கொடூர செயலில் ஈடுபட்டதாக தெரியவந்தது.
இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதனை தொடர்ந்து மாணவியை பலாத்காரம் செய்தது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக, சதீஷ் (31), அவருடைய சகோதரர் காளீஸ்வரன் (23) மற்றும் உறவினர் தவசி (25) ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்ய முயன்றனர் . அவர்கள் தப்ப முயன்ற போது துப்பாக்கியால் சுட்டுப்பிடித்தனர்.
இந்த வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. நீதிபதி சுந்தர்ராஜன் முன்னிலையில் நடந்து வரும் இந்த வழக்கில் சாட்சிகள் விசாரணை நடைபெற்று வந்தது. கல்லூரி மாணவியின் தாய், கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை ஆய்வு செய்த அதிகாரி, உயிரி தொழில்நுட்ப பரிசோதனை அதிகாரி உள்பட மொத்தம் 72 பேரிடம் சாட்சி விசாரணை நடைபெற்றது.
இந்த சாட்சி விசாரணை அனைத்தும் இன்று நிறைவடைந்தது. இதனை தொடர்ந்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு உள்ள சதீஷ், காளீஸ்வரன், தவசி ஆகிய 3 பேரும் நாளை செவ்வாய்க்கிழமை கோர்ட்டில் நேரில் ஆஜர்படுத்தப்படுகின்றனர்.
இதையடுத்து அவர்களிடம் விசாரணை நடைபெறும். இதைத்தொடர்ந்து இந்த மாத இறுதிக்குள் இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட உள்ளது.
