கோவை குடிநீர் திட்டங்கள் ஒதுக்கீட்டில் முறைகேடா…!?
கோவை, திருப்பூர் மாவட்டத்தில் சிறுவாணி, பில்லூர், குறிச்சி குனியமுத்தூர், ஆழியாறு, வடவள்ளி பேரூர் கூட்டு குடிநீர் திட்டம், பவானி உட்பட 25 ஒருங்கிணைந்த கூட்டு குடிநீர் திட்டங்கள் பயன்பாட்டில் இருக்கிறது.
இந்த குடிநீர் திட்டங்கள் மூலமாக இரு மாவட்டத்தில் சுமார் 65 லட்சம் பொதுமக்கள் பயன்பெற்று வருகின்றனர்.
தினமும் சுமார் 50 கோடி லிட்டர் குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில், மொத்த குடிநீர் திட்டங்களை இயக்கி பராமரிக்கும் பொறுப்பு அவிநாசியை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர்
வசம் ஒப்படைக்கப்பட்டது.
இவர் மத்திய அமலாக்கத்துறை சோதனையில் சிக்கியவர். இவர் கடந்த 3 ஆண்டாக கோவை திருப்பூர் வட்டாரத்தில் குடிநீர் வினியோக பணிகளை செய்து வருகிறார்.
நடப்பு ஆண்டில் குடிநீர் பராமரிப்பு, சப்ளை டெண்டரில் பங்கேற்க கடும் போட்டி ஏற்படவில்லை. பல்வேறு நிறுவனங்கள் போட்டி போடாத நிலையில், இவருக்கே மீண்டும் பணி வழங்க ஒரு முடிவு செய்து விட்டதாக தகவல் வெளியானது.
3 ஆண்டு காலம் திட்டத்தை இயக்கி பராமரிக்க சுமார் 40 கோடி ரூபாய்க்கு டெண்டர் கோரப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதன் பின்னணியில் 10 முதல் 11% தொகை கமிஷனாக கை மாறி இருப்பதாக ஒப்பந்ததாரர்கள் தரப்பில் தகவல் வெளியாகி இருக்கிறது.
இது தொடர்பாக குடிநீர் வடிகால் வாரியத்தினர் கூறுகையில், “கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து ஒருங்கிணைந்த குடிநீர் திட்டங்களும் தனித்தனியாக பராமரிக்கப்பட்டது. நிர்வாக காரணங்களினால் இப்போது ஒரு நிறுவனத்தின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
, அணை, ஆறு போன்றவற்றில் இருந்து நீர் எடுப்பது சுத்திகரிப்பது, குழாய் மூலமாக மேல் நிலை நீர் தேக்க தொட்டிகளுக்கு வினியோகம் செய்வது, குழாய்களில் சீராக குடிநீர் செல்வதை கண்காணிப்பது, ஸ்கேடா மூலமாக குடிநீர் வினியோக அளவை – பராமரிப்பது போன்ற பணிகள் தனியார் வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த தனியார் நிறுவனத்தினர் உரிய அளவில் குடிநீர் வழங்கி வருகிறார்களா என தொடர்ந்து கண்காணிப்போம்.
குழாய் விரிசல், பழுது, உடைப்பு ஏற்பட்டால் விரைவாக சரி செய்து குடிநீர் வழங்க வேண்டும். பராமரிப்பு பணி தாமதம் ஏற்பட்டால் அந்த நிறுவனம் தான் பொறுப்பேற்க வேண்டும். குடிநீர் வினியோக பணியில் இருப்பவர்களுக்கு அரசு அறிவித்த அளவிற்கு ஊதியம் வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடிநீர் அளவு குறைந்தால் சம்பந்தப்பட்ட நிறுவனத்தினர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பிரதான குழாய், மேல் நிலை நீர் தேக்க தொட்டிகளில் நீர் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு அடிக்கடி ஆய்வு நடத்தப்படும். குடிநீர் வினியோகம் தடையின்றி தொடர் தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது,” என்றனர்.
ஒப்பந்ததாரர்கள் சிலர் கூறுகையில்,” செட்டிங் டெண்டர் முறையில் குறிப்பிட்ட ஒரு நிறுவனத்திற்கு மீண்டும் இயக்குதல் மற்றும் பராமரிப்பு பணிகள் ஒப்படைக்க திட்டம் போட்டு இருக்கிறார்கள். தேர்தல் தேதி அறிவிக்கும் முன் பணிகளை ஒப்படைக்க முடிவு செய்து இருக்கிறார்கள்.
டெண்டர் முறையாக விதிமுறைப்படி நடக்கவில்லை. இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும். குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகள் ஒப்பந்த விதிகளை மீறுவது சரியல்ல, ” என்றனர்.
