கோவை டிஜி காப் வாட்ஸ் அப் சாட் போட் அறிமுகம்.. !
கோவை மாவட்ட போலீஸ் சார்பில் பொதுமக்கள் வசதிக்காக ‘கோவை டிஜி காப்’ என்ற பெயரில் புதிய வாட்ஸ்ஆப் சாட் போட் சேவை இன்று அறிமுகம் செய்யப்பட்டது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார், தமிழக மேற்கு மண்டல போலீஸ் ஐஜி சரவண சுந்தர், கோவை மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் அறிமுகப்படுத்தி வைத்தனர்.
போலீசாரை பொதுமக்கள் எளிதில் அணுகும் வகையில், கோவை டிஜி காப் என்ற புதிய வாட்ஸ் ஆப் சாட் போட் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது, பொதுமக்கள் 98400 91100 என்ற செல்போன் நம்பருக்கு வாட்ஸ் ஆப் மூலம் ஹேய்’ (hi) என்று ஒரு குறுஞ்செய்தி அனுப்புவதன் மூலம் இந்த சேவையைப் பெறலாம்.
இதற்கென தனியாக ஆப் எதையும் பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமில்லை.
இந்த வாட்ஸ் ஆப் சாட்போட் மூலம் 9-க்கும் மேற்பட்ட துறைகளில் பல்வேறு சேவைகள் வழங்கப்படுகின்றன. பொதுமக்கள் தாங்கள் இருக்கும் இடத்திற்கு அருகிலுள்ள போலீஸ் ஸ்டேஷன் அதன் தூரம் அதிகாரிகளின் தொடர்பு எண் போன்ற விவரங்களை பெறலாம்.
சைபர் குற்றங்கள், போக்குவரத்து விதிமீறல்கள் போன்றவை குறித்து ஆன்லைன் மூலம் புகார் அளிக்கலாம்.
பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பவர்கள், போதைப்பொருள் புழக்கம் அல்லது பெண்களுக்கு எதிரான குற்றங்கள் குறித்து பெயர் மற்றும் மொபைல் எண்ணை வெளிப்படுத்தாமல் புகார் அளிக்க முடியும்.
கொடுத்த புகாரின் நிலைமையை தெரிந்து கொள்ள முடியும். நள்ளிரவு நேரங்களில் அவசர உதவி தேவைப்பட்டால், அந்தப் பகுதியில் பணியில் இருக்கும் ரோந்து அதிகாரியின் விவரங்களை உடனே அதில் பெறலாம்.
சைபர் பாதுகாப்பு, சாலை பாதுகாப்பு மற்றும் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான சட்ட ஆலோசனைகள் மற்றும் விழிப்புணர்வு வீடியோக்களை இதில் காணலாம். போக்குவரத்து அபராதங்களை செலுத்துதல், திருடப்பட்ட வாகனங்களின் விவரங்களைச் சரிபார்த்தல் மற்றும் அவசர கால தொடர்பு எண்களைப் பெறுதல் போன்ற வசதிகளும் இதில் உள்ளன.
இந்தச் சேவையை 24 மணி நேரமும் கண்காணிக்க கோவை மாவட்ட காவல்துறையில் (தனி ‘டெஸ்க்’ மற்றும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. பெறப்படும் புகார்கள் மீது உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.
