கோவை பெரியார் நூலகத்திற்கு ரூ 40 கோடியில் 1.25 லட்சம் புத்தகங்கள்..!
கோவை காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் 300 கோடி ரூபாய் செலவில் 7 தளங்களில் சுமார் 7 லட்சம் சதுர அடி பரப்பளவில் பெரியார் நூலகம் கட்டுமான பணி பிரமாண்டமாக நடக்கிறது.
இந்த பணி விரைவில் நிறைவு பெறும் நிலைமையில் இருக்கிறது. சமீபத்தில் தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்த நூலகத்தில் ஆய்வு செய்து பணிகளை வேகமாக முடிக்க உத்தரவு வழங்கினார்.
இந்த நூலகத்தில் 40 கோடி ரூபாய் மதிப்பிலான 1.25 லட்சம் புத்தகங்கள் வைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள பதிப்பகங்கள் மூலமாக இதுவரை 20 ஆயிரம் புத்தகங்கள் பெறப்பட்டிருக்கிறது.இன்னும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட புத்தகங்கள் நூலகத்திற்கு கொண்டு வரப்பட இருக்கிறது.
இது தொடர்பாக கோவை மாவட்ட நூலக அலுவலர் ராஜேந்திரன் கூறுகையில்,” பெரியார் நூலகத்திற்காக தமிழ் ,ஆங்கிலம், வரலாறு, கலை, இலக்கியம், கலாச்சாரம், கதை, கட்டுரை, கவிதை அறிவியல் ,ஆன்மீகம், கணினி உள்பட பல்வேறு தலைப்புகளில் புத்தகங்கள் புதிதாக அச்சடித்து பெறப்பட்டு வருகிறது.
பழைய புத்தகங்கள் எதுவும் இந்த நூலகத்திற்கு பெறப்படவில்லை.
இன்னும் ஒரு வாரத்தில் தேவையான புத்தகங்கள் பெறப்படும். இந்த புத்தகங்களுக்கு ரேக் அமைத்து குறிப்பு உதவி தகவல்கள் அந்தந்த தளங்களில் வைக்கப்படும். இதை பார்த்து புத்தகங்களை தேர்வு செய்து எடுக்க முடியும்.ஒரு வாரத்தில் மொத்த பணிகள் முடிந்துவிடும். இந்த நூலகம் தமிழகத்தின் ஒரு முக்கிய அடையாளமாக இருக்கும்,” என்றார்.
