கோவை மாநகராட்சி பட்ஜெட்டில் ஏமாற்றம்
கோவை மாநகராட்சியில் ஆண்டு பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ள முக்கிய அம்சங்களை மேயர் ரங்கநாயகி கவுன்சில் கூட்டத்தில் அறிவித்தார்.
அவர் கூறியதாவது ;
மாநகராட்சி கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளிகளில் கூடுதல் வகுப்பறைகள் மற்றும் பழுதடைந்த கட்டிடங்களில் தேவையான மராமத்து பணிகளை மேற்கொள்ள இந்த நிதி ஆண்டில் ரூ. 20 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. பள்ளி வளாகங்களில் சுகாதார நிலையம் மேம்படுத்த ரூ. 5 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநகராட்சி பள்ளிகளில் மாணவர்களின் உடல் ஆரோக்கியத்தை வளர்க்கும் நோக்கில் கடந்த நிதியாண்டில் கிரிக்கெட் பேட்மிண்டன், சதுரங்கம் கேரம் மற்றும் ஓட்டப்பந்தயம் போன்ற விளையாட்டு போட்டிகள் மண்டல வாரியாக நடத்தப்பட்டன.
இந்த நிதி ஆண்டிலும் மண்டல வாரியாக விளையாட்டு போட்டிகள் நடத்தப்படும். இப்போட்டிகள் மாணவர்களின் விளையாட்டு திறனை வெளிக்கொணரவும், ஆரோக்கியமான போட்டித் தன்மையை உருவாக்கவும் உதவும். இதற்கான இந்த நிதி ஆண்டில் ஒரு 40 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநகரில் செயல்படும் வீடில்லா நாய்களுக்கான 4 கருக்கடை மையங்களில் 2025-26ம் ஆண்டில் ரூ.2 கோடி 35 லட்சம் செலவினத்தில் 14,296 வீடில்லா நாய்களுக்கு இனப்பெருக்க கருத்தடை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. வரும் நிதியாண்டில் நடவடிக்கைகளை துரிதப்படுத்தி சுமார் 36,000 வீடில்லா நாய்களுக்கு இனப்பெருக்க கருத்தடை சிகிச்சைகள் மேற்கொள்ளும் திட்டம் செயல்படுத்தப்படும்.
இதற்காக இந்த நிதியாண்டில் ரூ. 6 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.கோவை மாநகரில் சுற்றுச்சூழல் சமநிலையை மீட்டெடுக்கவும், நீண்ட கால பருவநிலை பின்னடைவை உருவாக்கவும் பருவநிலை நிதிநிலை அறிக்கை 2026- 27 தயார் செய்யப்பட்டுள்ளது.
இந்த திட்டம் நகரில் நீர் வள மேலாண்மை பசுமை போர்வை உருவாக்க மற்றும் வெப்ப தணிப்பு ஆகியவற்றை ஒருங்கிணைந்த முறையில் செயல்படுத்த இலக்கு கொண்டுள்ளது.
தொடர்ந்து நிதிக்குழு தலைவர் முபசீரா 2026-27 ம் ஆண்டுக்கான வரவு- செலவு திட்ட அறிக்கையை வாசித்து நன்றி தெரிவித்தார். தொடர்ந்து பட்ஜெட் குறித்த விவாதம் நடந்தது.
பொதுமக்களும் அரசு இணைந்து தேவையான பணிகளை மேற்கொள்ள தமிழக அரசால் செயல்படுத்தப்படும் நமக்கு நாமே திட்டத்தில் மாநிலத்திலேயே முதலிடமாக கோவை மாநகராட்சி உள்ளது. 2024 25ம் ஆண்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 10.60 கோடி மதிப்பீட்டு தொகையில் அரசின் பங்களிப்பாக ரூ. 3.49 கோடியும் மற்றும் தனியார் பங்களிப்பாக ரூ. 7.11 கோடியில் கோவை மாநகராட்சிக்குட்பட்ட 83 மாநகராட்சி பள்ளிகள், 45 நகர்ப்பும் நல்வாழ்வு மையங்கள் மற்றும் மாநகராட்சியின் 5 மண்டலங்கள் மற்றும் பிரதான அலுவலகத்தில் டிஜிட்டல் ஆப்டிகல் நெட்வொர்க் தளம் மற்றும் உள் கட்டமைப்பு பணிகள் ரூ. 3.85 கோடியில் நடைபெற்று வருகிறது.
2025 26ம் ஆண்டில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் ரூ. 357 கோடி மதிப்பீட்டில் அரசின் பங்களிப்பாக ரூ. 1.95 கோடி மற்றும் தனியார் பங்களிப்பாக ரூ. 1.56 கோடியில் மொத்தம் 16 பணிகள் எடுக்கப்பட்டு 12 பணிகள் முடிக்க ப்பட்டு விட்டன. மீதமுள்ள 4 பணிகள் நடைபெற்று வருகிறது.
இவ்வாறு மேயர் தெரிவித்தார்.
இந்த பட்ஜெட்டில் பொதுமக்களுக்கு தேவையான திட்டங்கள் எதுவும் அறிவிக்கப்படவில்லை. ஏழை எளிய மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் திட்டமாக உள்ளது என அதிமுக கவுன்சிலர் பிரபாகரன் விவாதம்
செய்தார் . அதற்கு மேயர் ரங்கநாயகி கல்வி, உட்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல்வேறு அம்சங்கள் பட்ஜெட்டில் இடம் பெற்றுள்ளது என தெரிவித்தார். இதற்கு பிரபாகரன் எதிர்ப்பு தெரிவித்ததால் சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. தொடர்ந்து அதிமுக கவுன்சிலர்கள் பிரபாகரன், ஷர்மிளா வெளிநடப்பு செய்தனர். பின்னர் மாநகராட்சியை கண்டித்து வளாகத்தில் கோஷம் எழுப்பினர். இதனால் மாநகராட்சி அலுவலக வட்டாரத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
