கோவை மாவட்டத்தில் ‘என் ஊரு என் கனவு’ விஷன் 2030 திட்டம்..!

கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் என் ஊரு. என் கனவு என்ற விஷன் 2030 திட்டம் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் இன்று நடந்தது.

இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன் குமார், வருவாய் அலுவலர் நாராயணன் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் கோவை மாவட்டத்தில் மக்கள் தொகை, வேலைவாய்ப்பு, தொழில், விவசாயம், குடிநீர் மற்றும் பல்வேறு அடிப்படை கட்டமைப்புகள் தொடர்பாக அடுத்த நான்கு ஆண்டுகளுக்கு செய்ய வேண்டிய பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

மக்கள் தொகை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. இதற்கு ஏற்ப வசிப்பிடம், தொழில், உணவு மற்றும் பல்வேறு அடிப்படை கட்டமைப்புகள் மேற்கொள்ள வேண்டும்.

மக்கள் தொகை அதிகமாக இருக்கும் போது குறைவான தங்கும் இடவசதி பாதிப்பை ஏற்படுத்தும். மக்கள் அனைவருக்கும் குடியிருப்பு, வாகனம், தொழில் போன்ற வசதிகள் தேவை. ரசாயன உணவு உற்பத்தியை தவிர்த்து இயற்கை முறையில் விவசாய பயிர் சாகுபடி மேற்கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

புறநகரில் தொழில் கட்டமைப்புகளை மேம்படுத்த தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். ரோடு, குடிநீர், மின்விளக்கு போன்ற அனைத்து வசதிகளும் கிராமங்களில் கட்டாயம் இருக்க வேண்டும். தொலைதொடர்பு வசதியும் சிறப்பாக இருக்க வேண்டும்.

வரும் 2030ம் ஆண்டுக்குள் கோவை மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் முழு அளவில் கிராமங்கள் கூட சிறப்பான வளர்ச்சியை எட்டி இருக்க வேண்டும் என இந்த கூட்டத்தில் தெரிவிக்கப்பட்டது. மாநகராட்சி நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி பகுதிகளில் திட்டங்கள் நிறைவேற்றுவது தொடர்பான பல்வேறு துறை அதிகாரிகளின் கருத்து கேட்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *