கோவை மாவட்டத்தில் தேர்தல் பணிக்கு துணை ராணுவ படை விரைவில் வருகை..!
கோவை மாவட்டத்தில் சூலூர், சிங்காநல்லூர், கோவை தெற்கு, வடக்கு, தொண்டாமுத்தூர், மேட்டுப்பாளையம், கிணத்துக்கடவு, பொள்ளாச்சி, வால்பாறை, கவுண்டம்பாளையம் என 10 சட்டமன்ற தொகுதிகள் இருக்கிறது. இதில் 3524 ஒட்டு சாவடிகள் அமைக்கப்பட்டிருக்கிறது. இவற்றில் சென்சிடிவ் ஓட்டு சாவடிகள் 450 முதல் 500 ஆக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் கோவை மாவட்டத்திற்கு வெளி மாநிலத்தினர் அதிகளவு வந்து செல்கிறார்கள். கடந்த கால தேர்தல்களின் போது கோவை மாவட்டத்தில் பல்வேறு அசம்பாவித சம்பவங்கள் நடந்தது. மேலும் கோவை பதட்டமான மாவட்டங்களில் முக்கியத்துவம் பெற்ற பகுதியாக இருக்கிறது. இந்தியாவில் மேற்கு வங்கம், தமிழகம், கேரளா உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் நடக்கவுள்ளது.
இதில் தமிழகத்தில் உள்ள பிற மாவட்டங்களை காட்டிலும் கோவைக்கு அதிக பாதுகாப்பு முக்கியத்துவம் வழங்கப்பட்டிருக்கிறது.
தேர்தலின் போது கோவை மாவட்டத்தில் 6 ஆயிரம் போலீசார் பணியாற்றவுள்ளனர். ஆயுதப்படை, அதிரடிப்படை போலீசாரும் பணியில் ஈடுபடவுள்ளனர். பிற மாநிலங்களில் இருந்தும் போலீசார் குறிப்பாக துணை ராணுவ படையான சிஆர்பிஎப் போலீசார் வரவழைக்கப்படவுள்ளனர்.
கடந்த சட்டமன்ற தேர்தலின் போது கோவை நகரில் 3 கம்பெனி துணை ராணுவ படையும், புறநகரில் 5 கம்பெனி போலீசாரும் பணியாற்றினர். இந்த முறை கூடுதலாக 2 முதல் 3 கம்பெனி துணை ராணுவ படையினர் தேவை என கோவை மாவட்ட தேர்தல் பிரிவினர் தேர்தல் கமிஷனுக்கு தகவல் அனுப்பியுள்ளனர். ஒரு கம்பெனி படையில் 60 பேர் இடம்பெறுவர்.
கோவை மாவட்டத்திற்கு துணை ராணுவ படையில் இருந்து 500 முதல் 600 பேர் வரவழைக்கப்படவுள்ளனர். இவர்கள் கோவையில் தேர்தல் காலங்களில் தங்கி தேர்தல் பணி செய்வார்கள். குறிப்பாக சென்சிடிவ் பகுதிகளில் கண்காணிப்பு மற்றும் சிறப்பு பறக்கும் படைகளில் பணியாற்றவுள்ளனர்.
இவர்கள் 24 மணி நேர பணியில் ஈடுபடும் போது அதிநவீன துப்பாக்கிகளை வைத்திருப்பார்கள் தேர்தல் தேதி அறிவித்த பின்னர் இவர்கள் எல்லை பாதுகாப்பு பணியில் இருந்து கோவைக்கு வரவழைக்கப்படவுள்ளனர்.
