கோவை மாவட்டத்தில் வரும் 11ம் தேதி 10ம் வகுப்பு பொதுத் தேர்வு துவக்கம்
கோவை மாவட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு வரும் 11ஆம் தேதி (புதன்கிழமை) துவங்குகிறது. அன்றைய தினம் தமிழ் மற்றும் மொழிப்பாடத்திற்கான தேர்வும், 16-ம்தேதி ஆங்கிலம், 25-ம்தேதி கணிதம், 30-ம்தேதி அறிவியல் பாடத்திற்கான தேர்வு ஏப்ரல் 2-ம்தேதி சமூக அறிவியல் பாடத்திற்கான தேர்வு நடக்கிறது. ஏப்ரல் 6ம்தேதி விருப்ப பாடத்திற்கான தேர்வு நடக்கிறது. இத்தேர்வுகள் காலை 10 மணிக்கு துவங்கி, மதியம் 1.15 மணி வரை நடக்கிறது.
இத்தேர்வை கோவை மாவட்டத்தில் 158 மையங்களில் 518 அரசு பள்ளிகள், அரசு உதவிப்பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை சேர்ந்த 38 ஆயிரத்து 390 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர்.
தனித்தேர்வர்களாக 1,237 மாணவ, மாணவிகள் எழுதுகின்றனர். இத்தேர்வுக்காக, தேர்வு மையங்கள் அனைத்தும் தயார் நிலையில் உள்ளன. தேர்வு மையங்களில் மாணவ, மாணவிகளுக்கான அடிப்படை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளன.
மேலும், வினாத்தாள் வைக்கப்பட்டுள்ள இடங்களில் துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுஉள்ளது. தேர்வு மையத்தில் இருக்கைகளில் மாணவ, மாணவிகளின் நுழைவுச்சீட்டு எண் எழுதும் பணிகள் நடந்து வருகிறது.
மாணவர்களின் வசதிக்காக தேர்வு மையத்தின் வெளியே தகவல் பலகையில் அறை எண், ஹால் டிக்கெட் எண். தேர்வு தேதி உள்ளிட்டவை அடங்கிய நோட்டீஸ் ஒட்டப்பட்டுள்ளது. இத்தேர்வில் முறைகேடுகள், தவறுகள் நடக்காமல் இருக்கும் வகையில் கண்காணிப்பு பணிக்காக 237 பேர் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு உள்ளன.
தேர்வு பணியில் 108 முதன்மை கண்காணிப்பாளர்கள், 112 துறை அலுவலர்கள், 47 வழித்தட அலுவலர்கள், 217 பறக்கும் படை மற்றும் நிலையான படையினர், 2,075 அறை கண்காணிப்பாளர்கள், 318 அலுவலக பணியாளர்கள், மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு உதவ சொல்வதை கேட்டு எழுதும் (ஸ்கிரைப்) 963 பேர் ஈடுபடுகின்றனர்.
பொதுத்தேர்வையொட்டி தேர்வு மையங்கள் அமைந்துள்ள பள்ளிகளுக்கு பஸ் வசதிகள், மின்சார வசதிகள் தடையில்லாமல் வழங்க அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தேர்வு எழுத வரும் மாணவ, மாணவிகள் கட்டாயம் ஹால் டிக்கெட் எடுத்து வரவேண்டும்.
தேர்வு பணியில் ஈடுபடும் ஆசிரியர்களும், தேர்வு எழுத வரும் மாணவ மாணவிகளும் செல்போன் எடுத்து வர தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் பாலமுரளி தெரிவித்துள்ளார்.
