கோவை மாவட்டத்தில் 39 ஓட்டு சாவடிகள் நீக்கம்
கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தேர்தல் பிரிவின் சார்பில் அனைத்து கட்சி ஆலோசனை கூட்டம் இன்று இரவு நடந்தது. இதில் கோவை மாவட்ட கலெக்டர் பவன்குமார், மாவட்ட வருவாய் அலுவலர் நாராயணன் தேர்தல் பிரிவு நேர்முக உதவியாளர் மகேஸ்வரி, தாசில்தார் தணிகை வேல், அனைத்து சட்டமன்ற தொகுதிகளுக்கான உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில் தேர்தல் பிரிவின் சார்பில், “கோவை மாவட்டத்தில் 3563 ஓட்டு சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது. இந்த சட்டமன்ற தேர்தலுக்காக கூடுதல் வாக்காளர்களுக்காக 446 ஒட்டு சாவடிகள் உருவாக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், சமீபத்தில் எஸ்ஐஆர் என்ற வாக்காளர் பட்டியல் சுருக்க திருத்த பணிகள் நடத்தப்பட்டது.
இதில் இறந்த வாக்காளர்கள், முகவரி மாறி சென்றவர்கள், குறிப்பிட்ட முகவரியில் இல்லாத ஆப்சென்ட் வாக்காளர்கள் என சுமார் 6.50 லட்சம் பேர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டனர்.
இந்த நிலையில், மாவட்ட அளவில் தொகுதி வாரியாக ஒட்டு சாவடி மறு சீரமைப்பு பணி நடத்தப்பட்டது. இதில் 17 ஓட்டு சாவடிகள் தற்போதுள்ள இடத்திலிருந்து வேறு பகுதிக்கு மாற்றப்பட்டது. 20 ஓட்டு சாவடி கட்டடங்கள் மாற்றம் செய்யப்பட்டது.
3563 ஆக இருந்த ஒட்டு சாவடிகளில் பல்வேறு கட்ட ஆய்வுக்கு பின் 39 ஓட்டு சாவடிகள் நீக்கப்பட்டது. இனி மாவட்ட அளவில் 3524 ஒட்டு சாவடிகள் மட்டுமே இருக்கும், ” என தெரிவித்தனர்.
அரசியல் கட்சியினர் பேசுகையில், “மாவட்ட அளவில் 20 சதவீதத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்கள் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டு விட்டனர். இந்த நிலையில் கூடுதல் ஓட்டு சாவடிகள் அவசியம் இருக்காது. இப்போது குறைக்கப்பட்ட ஓட்டு சாவடிகளுடன் மேலும் ஓட்டு சாவடிகளை குறைக்க வேண்டும்.
குறிப்பாக கவுண்டம்பாளையம், கோவை வடக்கு பகுதியில் அதிக ஓட்டு சாவடிகள் இருக்கிறது. இங்கே ஆய்வு செய்து வாக்காளர்கள் எண்ணிக்கைக்கு ஏற்ப குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ” என்றனர்.
இதை தொடர்ந்து தேர்தல் பிரிவினர் எந்த பகுதியில் ஓட்டு சாவடி குறைக்க வேண்டும் என பட்டியல் தரலாம். மேலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு பணி நடக்கிறது. எனவே மேலும் வாக்காளர்கள் எண்ணிக்கை அதிகமாகும் நிலையிருக்கிறது, எனவே ஓட்டு சாவடி மேலும் நீக்கம் செய்ய கூடாது என தெரிவித்தனர்.
ஓட்டுச் சாவடி அதிகமாக இருந்தால் அதற்கேற்ப பூத் ஏஜென்ட் அதிகரிக்க வேண்டும். மாவட்ட அளவில் பூத் ஏஜென்ட் அமைக்க அவர்களுக்காக செலவு செய்ய கட்சியினர் நிதி ஒதுக்க வேண்டி இருக்கிறது. கூடுதல் செலவு ஏற்படும் என்பதால் கூடுதல் ஓட்டு சாவடி வேண்டாம் என கட்சியினர் ஆட்சேபம் தெரிவித்து வருவதாக கூறப்படுகிறது.
தேர்தல் பிரிவினர் ஓட்டு பதிவு நாளில் கூட்டம் அதிகரிப்பை தடுக்க கட்டாயம் கூடுதல் ஓட்டுச்சாவடிகள் அவசியம் என வலியுறுத்தியுள்ளனர்.
