கோவை மாவட்டத்தில் 60 ஆயிரம் பேருக்கு தபால் ஓட்டு..!
கோவை கலெக்டர் அலுவலகத்தில் உள்ள வாக்காளர் பட்டியல்..
கோவை மாவட்டத்தில் சுமார் 27 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 85 வயதுக்கு மேற்பட்ட வாக்காளர்கள் 22,000 பேர் வரை இருப்பதாக தெரியவந்துள்ளது . இதேபோல் மாற்றுத்திறனாளிகள் 14,500 பேர் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
வரும் சட்டமன்றத் தேர்தலில் 85 வயதானவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தபடியே தபால் ஓட்டு போட ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இதன்படி தபால் ஓட்டு போட தகுதியான மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் தொடர்பான ஆய்வுப் பணி நடக்கிறது.
மாவட்ட அளவில் மூத்த குடிமக்களான 85 வயது ஆனவர்கள் தேர்தலுக்கு முன்னர் மூன்று முதல் நான்கு நாளில் தங்கள் தபால் ஓட்டுக்களை பதிவு செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தேர்தல் அலுவலர்கள் தபால் ஓட்டு படிவங்களை மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீடுகளை தேடி சென்று கொடுப்பார்கள் . அவர்கள் அந்த படிவத்தை பூர்த்தி செய்து ஓட்டு பெட்டியில் போட வேண்டும் . ஓட்டு பதிவு செய்யும் போது அருகில் வேறு நபர்கள் யாரும் இருக்கக்கூடாது. இந்த விபரங்கள் அனைத்தும் தேர்தல் பிரிவினர் வீடியோவில் பதிவு செய்வார்கள்.
தேர்தல் நாளுக்கு முந்தைய நாள் வரை தபால் ஓட்டு போடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தபால் ஓட்டு போட விருப்பமில்லாதவர்கள் ஓட்டு சாவடிக்கு சென்று ஓட்டு போடலாம். மாற்றுத்திறனாளிகள் 45 வயது கடந்தவர்களாக இருந்தால் மட்டுமே தபால் ஓட்டு போட முடியும் என தேர்தல் பிரிவினர் தெரிவித்தனர்.
கோவை மாவட்டத்தில் 85 வயது கடந்தவர்கள், மாற்றுத்திறனாளிகள் 36,500 பேர் உள்ளனர். தேர்தல் பணியில் 20 ஆயிரம் அலுவலர்கள் தேர்தல் பணி போலீஸ்காரர்கள் 5 ஆயிரம் பேர் என மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளில் சுமார் 60 ஆயிரம் பேர் தபால் ஓட்டு போட தகுதியான நிலைமையில் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
இவர்கள் அனைவருக்கும் தபால் ஓட்டு சீட்டுக்கள் அச்சடித்து தேர்தல் நேரத்தில் வழங்குவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. கடந்த கால நிலை விட இந்த தேர்தலில் தபால் ஓட்டுகள் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும் என கோவை மாவட்ட தேர்தல் பிரிவு தாசில்தார் தணிகைவேல் தெரிவித்தார்.
