கோவை மாவட்ட எல்லையில் கனிமம் கடத்தல் கண்டறிய கேமரா

கோவை வழியாக கேரளாவிற்கு ஜல்லி கற்கள், செம்மண் கடத்தப்படுவதாக புகார்கள் எழுந்தது. இதனை தடுக்க மாவட்ட காவல்துறை, வருவாய் துறை, கனிமவளத்துறை அதிகாரிகள் இணைந்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன்ஒரு பகுதியாக கோவை-கேரள மாநில எல்லைகளான வாளையாறு, வேலாந்தாவளம் உள்பட 16 சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன.

இதுதவிர ஊரக பகுதிகளான பேரூர், தொண்டாமுத்தூர், மதுக்கரை, சூலூர் உள்பட குவாரிகள், செம்மண் அதிகம் உள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு உள்ளன. இந்த கண்காணிப்பு கேமராக்கள் மூலம் வாகனங்களை கண்காணிக்க கோவை கலெக்டர் அலுவலக 2-ம் தளத்தில் புதிதாக கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த கட்டுப்பாட்டு அறையுடன் மேற்கண்ட பகுதிகளில் பொருத்தப்பட்டு உள்ள கண்காணிப்பு கேமராக்கள் இணைக்கப்பட்டுள்ளன. இங்குள்ள பிரமாண்ட டி.வி.க்களில் கண்காணிப்பு கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் தெரியும். இதனை கட்டுப்பாட்டு அறையில் இருக்கும் கனிமவளத்துறையினர், போலீசார் கண்காணிப்பார்கள். ஏதாவது சந்தேகத்திற்கிடமான வாகனங்கள் சென்றால் அதுகுறித்து உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் நிலையம் மற்றம் வருவாய் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு அந்த வாகனங்களில் சோதனைகள் நடத்தப்படும்.

இந்த கட்டுப்பாட்டு அறை இன்னும் சில நாட்களில் முழுமையாக பயன்பாட்டிற்கு வரும் என அரசு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *