கோவை மேற்குப் பைபாஸ் ரோட்டில் ரூ 2.40 கோடியில் சுரங்கப்பாதை அமைக்க திட்டம்..

கோவை மதுக்கரை மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 11.8 கிலோ மீட்டர் தூரத்திற்கு 250 கோடி ரூபாய் செலவில் கோவை மேற்கு பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டது. அடுத்த வாரம் திறப்பு விழா நடத்த அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர். இந்த நிலையில் அறிவொளி நகர் பகுதியில் நான்கு ரோடு சந்திக்கும் இடத்தில் நேற்று சரக்கு ஆட்டோ மற்றும் பயணிகள் ஆட்டோ மோதியது .

இதில் 22 வயதான கல்லூரி மாணவி உடல் நசுங்கி இறந்து விட்டார். மேலும் நான்கு பேர் காயமடைந்தனர். இந்த விபத்து தொடர்பாக தகவல் அறிந்த அந்த பகுதி பொதுமக்கள் நேற்று சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அறிவொளி நகர் சந்திப்பு பகுதியில் சாலை பாதுகாப்பு வசதி அமைக்கப்படவில்லை.

ரோடு கடக்கும் இடத்தில் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இங்கே மேம்பாலம் அல்லது சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். ஏற்கனவே ரோடு போடும் பணி நடக்கும் போதே இந்த தகவலை தெரிவித்தோம். ஆனால் மாநில நெடுஞ்சாலைத்துறை இதை செய்யவில்லை என அதிருப்தி தெரிவித்தனர்.

மேலும் விபத்து நடந்த இடத்தை முன்னாள் அமைச்சர் எஸ் பி வேலுமணி பார்வையிட்டு கட்டாயம் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் பைபாஸ் ரோட்டை திறக்க விடமாட்டோம் என அதிகாரிகளிடம் ஆவேசமாக கூறி சென்றார் .

இதை தொடர்ந்து இன்று மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ஞானமூர்த்தி விபத்து நடக்கும் பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பதற்காக 2.4 கோடி ரூபாய் திட்ட மதிப்பீடு
தயார் செய்து அரசின் பார்வைக்கு அனுப்பி வைத்தார்.

இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை கோவை கோட்ட உதவி பொறியாளர் மார்ட்டின் கூறுகையில்,” விபத்து நடக்கும் பகுதிகளில் சப்வே அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது . இதில் திட்டம் மதிப்பீட்டை காட்டிலும் மேலும் அதிக தொகை செலவாக வாய்ப்புள்ளது. மேலும் இப்போதுள்ள ரோடு கட்டமைப்பிலும் மாற்றம் செய்ய வேண்டி இருக்கிறது. விபத்து நடக்காமல் தடுக்க இந்த பகுதியில் ரவுண்டானா மற்றும் பல்வேறு சாலை பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகிறது,” என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *