கோவை மேற்கு பைபாஸ் ரோடு அதிரடியாக மூடல்..!
கோவை மதுக்கரை மைல்கல் முதல் மாதம்பட்டி வரை 250 கோடி ரூபாய் செலவில் 11.80 கிலோமீட்டர் தூரத்திற்கு பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டிருந்தது. பணிகள் முடிக்கப்பட்டு வழிகாட்டி பலகைகள் அமைக்கப்பட்டு வாகன போக்குவரத்திற்கு திறக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
இந்த நிலையில் பைபாஸ் ரோடு திறப்பு விழா செய்யாமலேயே அதிக அளவு வாகனங்கள் இந்த ரோட்டில் இயங்கி வந்தது சமீபத்தில் கோவைப்பதூர் அறிவொளி நகர் பகுதியில் ஆட்டோ மற்றும் சரக்கு ஆட்டோ மோதியதில் கல்லூரி மாணவி ஒருவர் இறந்தார் . மேலும் மூன்று பேர் காயமடைந்தனர் .
இதனால் கோபம் அடைந்த அந்த பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். அடிக்கடி விபத்து நடக்கிறது. இந்த பகுதியில் சப்வே அமைக்க வேண்டும் என கோரிக்கை விடப்பட்டது. இதற்கான திட்டங்களை தயார் செய்து மாநில நெடுஞ்சாலை துறை நிர்வாகம் தமிழக அரசுக்கு அனுப்பி வைத்தது.
இந்த நிலையில் மீண்டும் விபத்துக்கள் ஏற்படும் அபாயம் இருப்பதை கருத்தில் கொண்டு நெடுஞ்சாலைத்துறை நிர்வாகம் மைல்கல் முதல் மாதம் பட்டி வரை வாகனங்கள் செல்வதற்கு தடை விதித்து பேரி கார்டு அமைத்து மூடிவிட்டது. இருப்பினும் ஒரு பகுதி வழியாக வாகனங்கள் கோவை புதூர் வரை சென்று வருகிறது .
இது தொடர்பாக நெடுஞ்சாலைத்துறை உதவி பொறியாளர் மார்ட்டின் கூறுகையில் பைபாஸ் ரோடு முழுவதும் வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு மட்டும் சில வாகனங்கள் சென்று வருகிறது. அறிவொளி நகர்பகுதியில் ரவுண்டானா மற்றும் உயர் கோபுர மின்விளக்கு அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. இங்கே விபத்து தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது
விரைவில் இந்த பைபாஸ் ரோடு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் . வாகனங்கள் செல்வதற்கு வேக எல்லை வரம்பு நிர்ணயம் செய்யப்படும் என தெரிவித்தார்.
