கோவை மேற்கு பைபாஸ் ரோடு திறப்பு விழாவுக்கு தடை…!
கோவை மைல்கல் முதல் மாதம்பட்டி வரை ரூ.250 கோடி ரூபாய் செலவில் 11.80 கிலோமீட்டர் தூரத்திற்கு பைபாஸ் ரோடு அமைக்கப்பட்டது. இந்த ரோடு பொதுமக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் பைபாஸ் ரோடு திறப்பு விழா திட்டத்தில் இடம்பெறாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கோவை நகரில் பெரியார் நூலகம் உள்பட பல்வேறு திட்டங்கள் துவக்கப்படவுள்ளது. இந்த பட்டியலில் பைபாஸ் ரோடு சேர்க்கப்படவில்லை .
கோவையின் பெரிய திட்டமாக பைபாஸ் ரோடு இருக்கிறது. ஜிடி நாயுடு பாலத்திற்கு பின்னர், இந்த பைபாஸ் தான் கோவை புறநகருக்கு இன்னொரு அடையாளமாக இருக்கும் என கருதப்படுகிறது. இவ்வளவு பெருமை மிக்க பைபாஸ் ரோடு பணிகள் முடிந்தும் திறக்கப்படாமல் இருப்பது பல்வேறு சந்தேகங்களை ஏற்படுத்தியிருக்கிறது.
மாநில நெடுஞ்சாலைத்துறையினர், சாலை பாதுகாப்பு பணியில் கவனம் செலுத்தாமல் விட்டு விட்டதாக பொதுமக்கள் அதிருப்தி தெரிவித்துள்ளனர். கடந்த சில மாதங்களாக மைல்கல் முதல் கோவைப்புதூர் வரையுள்ள ரோட்டை திறப்பு விழா செய்யாமலேயே பொதுமக்கள் பலர் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்.
கோவைப்புதுர் அறிவொளி நகர் பகுதியில் சமீபத்தில் சரக்கு ஆட்டோ மற்றும் பயணிகள் ஆட்டோ மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கல்லூரி மாணவி ஒருவர் இறந்து விட்டார். மூன்று பேர் காயம் அடைந்தனர். ஏற்கனவே இதே பகுதியில் அடிக்கடி விபத்து ஏற்பட்டு வந்துள்ளது. பொதுமக்கள் கடும் அதிருப்தியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
விபத்து நடக்கும் பகுதியில் மேம்பாலம் அல்லது சப்வே அமைக்க வேண்டும். இல்லாவிட்டால் பைபாஸ் ரோட்டை திறக்க கூடாது என பொதுமக்கள் தரப்பில் எச்சரிக்கை விடப்பட்டது. இதன் காரணமாக மேற்கு பைபாஸ் ரோடு திட்டம் திறப்பு விழா செய்யாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது.
இது தொடர்பாக மாநில நெடுஞ்சாலைத்துறை கோவை கோட்ட பொறியாளர் ஞானமூர்த்தி கூறுகையில், “நாங்கள் பைபாஸ் ரோடு பணிகளை முடித்து விட்டோம், திறப்பு விழா செய்வதற்கு தலைமை அலுவலகம் முடிவு செய்ய வேண்டும்.
திறப்பு விழா பட்டியலில் பைபாஸ் ரோடு திட்டம் இடம்பெறாமல் இருப்பது ஏன் என எங்களுக்கு தெரியவில்லை. சப்வே அமைக்கும் பணி விரைவாக நடத்த முடியாது. அதற்கு நிதி பெற்ற பின்னரே பணிகள் செய்ய முடியும்,” என்றார்.
